பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54


“ஐயோ, வேண்டாம் அப்பனே! இதோ நான் ஒதுங்கி விடுகிறேன்; நீ போ, கன ஜோராகப் போ!” என்று ஒதுங்கி வழி விட்டுவிட்டது மாட்டு வண்டி.

அது சொன்னபடியே கன ஜோராகப் போன காரை “எங்கே, என்னை மோதி மிதித்துவிடு பார்ப்போம் என்பதுபோல் ஒரு ரயில்வே கேட் தடுத்து நிறுத்தியது.

வேறு வழியில்லாமல் நின்ற காரை நெருங்கி, “அந்த ரயில் மட்டும் உன்னைக் கண்டதும் ஏன் அப்பா ஒதுங்கி வழி விடவில்லை?” என்று மாட்டு வண்டி கேட்டது.

கார் வாயைத் திறக்கவில்லை!

40. இருளும் ஒளியும்

“இருளே, இருளே! நான் வரும்போது நீ எங்கே போகிறாய்? நான் போனபின் நீ எங்கிருந்து வருகிறாய்?” என்று ஒரு நாள் இருளைக் கேட்டது ஒளி.

இருள் சிரித்தது; “ஏன் சிரிக்கிறாய்?” என்று கேட்டது ஒளி.

“எப்போதும் இருக்கும் என்னைப் பார்த்து வருவதும் போவதுமாயிருக்கும் நீ இப்படிக் கேட்டால், நான் சிரிக்காமல் அழவா செய்வேன்?” என்றது இருள்.

இதைக் கேட்ட ஒளி தனக்குத் தானே முணுமுணுத்துக் கொண்டது:

“எல்லாம் வெறும் பிரமை, எல்லாம் வெறும் பிரமை!”