பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54. சஞ்சல புத்தி

"நாளை முதல் நம்முடைய நாட்டில் தூக்குத் தண்டனையே கிடையாது’ என்று நாடெங்கும் பறை சாற்றச் சொல்லுங்கள்!" என்று தன் மந்திரிகளுக்குக் கட்டளையிட்டான் அரசன்.

"வேண்டாம் அரசே, அதனால் துஷ்டர்கள்தான் சந்தோஷமடைவார்கள்!" என்று மந்திரிகள் சொன்னார்கள்.

அரசன் சிரித்தான். "நீங்கள் சொல்வது வேடிக்கையாயிருக்கிறதே, அப்படியானால் தூக்குத்தண்டனை விதிப் பதைக் கண்டு சந்தோஷம் அடைபவர்கள் எப்படி நல்லவர்களாயிருக்க முடியும்?-மதியற்ற மந்திரிகளே! போங்கள்; போய் என்னுடைய கட்டளையை உடனே நிறைவேற்றுங்கள்!" என்றான்.

வேறு வழியின்றி மந்திரிகள் அரசனுடைய கட்டளையைச் சிரமேற்கொண்டு நிறைவேற்றி வைத் தார்கள்.

மறுநாள் வழக்கம்போல் அரச சபை கூடியது. காவலர்கள் யாரோ ஒருவனைக் கட்டிப் பிடித்துக் கொண்டு வந்து, “அரசே, இவன் பெயர் சுப்பன். இவன் ஏதோ விரோதத்தின் காரணமாகக் குப்பன் என்பவனை நேற்றிரவு கொலை செய்துவிட்டான்" என்றனர்.

"மன்னித்தோம்; சுப்பனை உடனே விடுதலை செய்யுங்கள்!" என்றான் அரசன் பெருமையுடன்.

அதற்கடுத்த நாள் வேறொருவனைக் கைது செய்து கொண்டு வந்து, "வேந்தர்வேந்தே, இவன் சுப்பனால் கொலையுண்ட குப்பனின் அண்ணன். இன்று காலை இவன் தன் தம்பியைக் கொன்ற சுப்பனைக் கொன்று விட்டான்!" என்று காவலர்கள் தலைவணங்கிச் சொன்னார்கள்.