பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

57. இது ரகசியம்

அன்று என்னவோ தெரியவில்லை; திடீரென்று தன் ஆருயிர் நண்பனான மணிமகுடத்தை நினைத்துக் கொண்டது மூலதனம்.

அவ்வளவுதான்; ஆயிரமாயிரம் தொழிலாளரைக் கசக்கிப் பிழிந்து, தன் முதலாளி தனக்கென்று தயார் செய்து வைத்திருந்த 'ரத்த பானத்தை எடுத்து ஒரே மூச்சில் நெட்டிவிட்டு, "ஏய், யார் அங்கே?" என்று குரல் கொடுத்தது அது.

"எசமான்" என்று ஒடோடியும் வந்து அதற்கு எதிரே நின்றது லாபம்.

"ஆயத்தமாகி விட்டாயா?" என்று மூலதனம் அதை அதட்டிக் கேட்டது.

“எதற்கு?" என்று லாபம் கேட்டது. "எசமானிடமா எதிர்க்கேள்வி போடுகிறாய்? கேட்டதற்குப் பதில் சொல்!” என்றது மூலதனம்.

"இல்லை, கேட்கவில்லை; இதோ ஆயத்தமாகி விட்டேன்" என்று லாபம் குனிந்து, முதுகை ஆசன மாக்கி மூலதனத்துக்குக் கொடுத்தது.

அதன்மேல் தாவி ஏறிக்கொண்டு, "சலோ, டெல்லி!” என்று கட்டளையிட்டது மூலதனம்.

அரண்மனை வாசலை நெருங்கியதும், 'யாரைப் பார்க்கவேண்டும், நீங்கள்?' என்று கேட்டனர் காவலர்கள்.

"மன்னரின் முடியை அலங்கரிக்கும் என் நண்பர் மணிமகுடத்தை" என்று அவர்களை ஏறெடுத்துகூடப் பார்க்காமல் இறுமாப்புடன் பதில் அளித்தது மூலதனம்.

'கலகல'வெனச் சிரித்தார்கள் காவலர்கள்.