பக்கம்:விளையாட்டு உலகம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

விளையாட்டு உலகம்

போட்டி தொடங்கிவிட்டது. கடுமையான போட்டி தான். யார் வெல்வார், யார் தோற்பார் என்பதை யாரும் நிர்ணயித்துக் கூறமுடியாத அளவுக்கு இருவரும் சம ஆற்றல் படைத்தவர்கள்தான்.

முதல் 'முறை ஆட்டத்தில்’ (Game), இளைஞரான யாகுவாகுவா எந்தவித சிரமமும் இன்றி, கோக்னோவை 21-17 என்ற வெற்றி எண் கணக்கில் வென்றார். இரண்டாம் 'முறை ஆட்டம்' தொடங்கியது. கோக்னோ 7-4 என்ற வெற்றி எண் (Point) கொண்டிருந்தபோது, யாகுவாகுவா சர்வீஸ் போடுகிறார். கையில் பந்தை மறைத்து சர்வீஸ் போடுகிறார் என்று குற்றம் சாட்டி இவ்வாறு சர்விஸ் போடுவது தவறு என்று நடுவர் கூறுகிறார். ஒரு முறையல்ல, இவ்வாறாக இரண்டாவது முறையும் குற்றம் சாட்டப்படுகிறது. அதனால் 2 வெற்றி எண்கள் எதிராளிக்குப் போய்ச் சேருகின்றன. இப்பொழுது ஜப்பானிய வீரருக்கு 9—4 என்று வெற்றி எண் ஏறுகிறது.

அதற்குப் பிறகு, சீன வீரரின் ஆட்டத்தில் சிறிது தடுமாற்றம். எதிர்பாராத குழப்பம். முன்பு ஆடியது போல அவர் ஆட்டத்தில் வேகமோ விறுவிறுப்போ இல்லை. எளிதாக ஜப்பானிய வீரரிடம் தோற்றுப் போகிறார். அதற்குப் பிறகு, தொடர்ந்து இரண்டு முறை ஆட்டங்களிலும் தோற்று, உலக வெற்றி வீரர் பட்டத்தை இழக்கிறார்.

போட்டி முடிகிறது. வென்ற வீரர் கோக்னோ கூறுகிறார். "நடுவர் இடைபுகுந்து இரண்டு முறை குற்றம் சாட்டிவிட்டதால்தான், தன் எதிராட்டக்காரர் தோற்கக் காரணமாக அமைந்துவிட்டது" என்று தான் நினைப்பதாகத் தெரிவிக்கிறார்.