பக்கம்:விளையாட்டு உலகம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

விளையாட்டு உலகம்

திட்டம்போட்ட ஷெப்பார்டு இரண்டாம் இடத்தையே பெற முடிந்தது. குறுக்கு வழியில் வெற்றி பெறலாம் என்று பகடைக்காய்போல் ஒரு வீரனைப் பயன்படுத்த, பலிகொடுக்க முனைந்த ஷெப்பார்டு தோற்று, இரண்டாம் இடத்தையே பெற முடிந்தது.

‘தான் தோற்றுப் போனலும் பரவாயில்லை, தனது நாட்டுக்கே தங்கப்பதக்கம் வரவேண்டும்’ என்று தியாகத்திற்குத் தயாரான அந்த அமெரிக்கப் பள்ளி மாணவனுக்கோ, தங்கப்பதக்கம் எதிர்பாராமலே கிடைத்துவிட்டது.

‘மனிதன் நினைக்கிறான். இறைவன் அழிக்கிறான்’ என்பது ஒரு ஆங்கிலப் பழமொழி. ‘நல்லதை நினைத்தால் நல்லது நடக்கும். தீங்கினை நினைத்தால் தீங்கே பயக்கும்’ என்பதும் முதுமொழிதான். குறுக்கு வழிகள் முதலில் வெற்றி தருவதுபோல தோன்றினாலும், இறுதியில் நேர்மையே வெல்லும் என்ற உண்மையைத் தான் இறைவனது சக்தி அவ்வப்போது வெளிப்படுத்துகின்றது.

அத்தகைய அளவிடற்கரிய சக்தியின் சாதனையில் தான் இந்த அகிலமே நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. நல்லதையே நினைப்போம். நல்லதற்கே திட்டமிடுவோம். நல்ல பலனையே பெறுவோம்.

இந்த சிந்தனைக்கு விருந்தாகிய உத்தம வீரன் ஜேம்ஸ் மெர்டித் வென்றதையும், வெற்றி பெறக்கூடிய ஆற்றல்மிக்க மெர்வின், குறுக்கு வழியில் சென்றதால் தோற்ற நிலையையும் நினைத்து, நாம் நமது சக்தியினைக் கொண்டு சத்திய வழியில் சாதனை புரிவோம் என்று உறுதிகொள்வோம். இது நம்மால் முடியும்! முயன்றால் முடியாதது உண்டோ!