பக்கம்:விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்.pdf/57

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.55
டாக்டர். எஸ்.நவராஜ் செல்லையா
 


21. முயன்றால் நிச்சயம் முடியும்!

சதுரங்க ஆட்டம் ஆடுவதென்பது மிகவும் சிரமமான காரியம்தான். அதே நினைவுடன், அங்குமிங்கும் திரிகின்ற மனதை அடக்கி, உடலைக் கட்டுப்படுத்தி, ஒன்றுபட்ட மனதுடன் சிந்தித்து ஆடவேண்டும் என்பது யாவரும் அறிந்ததே!

தன்முன்னால் அமர்ந்து ஆடுகின்ற எதிராட்டக் காரருக்கே இந்த நிலை என்றால், இங்கே ஒரு ஆட்டக்காரர் 560 ஆட்டக்காரர்களை எதிர்த்தாற் போல் உட்கார வைத்துக் கொண்டு. அத்தனைபேர்களுடனும் போட்டியிட்டுசதுரங்கம் ஆடியிருக்கிறாரே! அது எப்படி அவரால் ஆடமுடிந்தது!

ஆச்சரியமாக இல்லையா ஸ்விட்சர்லாந்து நாட்டு மாணவனான அந்த சதுரங்க விளையாட்டு வீரனின் பெயர் வெர்னர் ஹக் (Werner Hug) என்பதாகும். 27 வயது நிரம்பிய அந்த இளைஞன் ஏற்கனவே ஒருமுறை இளையோர் சதுரங்கப் போட்டியில் (Junior) உலக வெற்றி வீரனாக வந்தவன். தனது திறமையை விளக்கும் வகையில்தான் அந்தப்போட்டியில் கலந்து கொண்டான்.

லூசர்னி என்னும் இடத்தில் அந்தப்போட்டி நடைபெற்றது. வரிசை வரிசையாக 560 சதுரங்க விளையாட்டு வீரர்கள் அமர்ந்து ஆட ஆரம்பித்தனர். ஒவ்வொரு மேஜைக்கும் முன்னே போய்நின்று ஒரு காயை நகர்த்திவிட்டு அடுத்த மேஜைக்கு ஆடப் போய்விடுவான். அதற்கு வெர்னர் ஹக் எடுத்துக்கொண்ட நேரம் ஐந்தே வினாடிகள்தான்.

இப்படி ஓடி ஓடி அத்தனை பேருடனும் ஆடியபிறகு அத்தனை ஆட்டங்களின் முடிவுகள் எப்படி இருந்தன தெரியுமா? 560 ஆட்டங்களில் 385 பேர்களை வென்றான். 126ஆட்டங்களை வெற்றிதோல்வியின்றி சமமாக முடித்தான்.