பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
93

ஒருவர் முயற்சித்தாரானால், உலகில் சண்டையும் சச்சரவும், பூசலும் பொறாமையும் எப்படி ஏற்படும்?

அத்தகைய உயர்ந்த உண்மையை, உயரிய தன்மையை இளமையிலேயே விளையாட்டாகப் பிஞ்சு மனங்களில் பதிய வைக்கும் ஓரிடம் ஓட்டப்பந்தயமாகத் தான் இருக்க முடியும். இத்தகைய பரந்த மனப் பான்மையை, கட்டுப்பாடான சூழ்நிலையில் தான் கற்றுக் கொள்ள முடியும்.

பார்வையாளர்களாக பலர் கூடிப் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது, பந்தயத்தில் விதி முறைகளோடு பங்கு பெற்று வெற்றி பெறும் வீரர்கள், பலராலும் விதந்து பாராட்டப்படுகின்றார்கள். அதே சமயத்தில் தவறிழைக்கின்ற வீரன் வெற்றி வாய்ப்பை இழக்கின்றதுடன், பலரின் ஏச்சுக்கும், பேச்சுக்கும் கேலிக்கும், கிண்டலுக்கும் உரியவனாகி விடுகிறான்.

ஆகவே, தவறு இழைக்க வேண்டும் என்ற மனப் பான்மையே அங்கு தகர்த்தெறியப்படுகிறது. தவறு இழைத்துக் குறுக்கு வழியில் சென்று வெற்றி பெற்று விடவேண்டும் என்ற நினைவும் அங்கு தலை தூக்குவதே இல்லை .

வீரர்களின் நினைவுகள்

நேர்மையான நினைவுகள், நிதானமான நடைமுறை நோக்கத்தை நோக்கிச் செல்லும் ஆர்வம், ஆர்வத்துடன் விதிகளுக்கு, அடங்கி நடக்கும் பண்பாடு, அடுத்தவருடன் திறமை ஒன்றினால் மட்டுமே போட்டியிடும் செயல். இப்படித்தான் ஓட்டப் பந்தயங்களில் பங்கு பெறும் வீரர்களைக் காண முடியும்.