பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94' விரைவோட்டம் என்றால் ஒரே மூச்சில் ஓடி முடிக்க வேண்டும். நெட்டோட்டம் என்ற நீண்ட தூர ஓட்டம் என்றால், அதற்கான முறையில், பக்குவமாக ஒட வேண்டும் என்ற பாங்கினை எல்லாம் பயிற்சியிலேயே ஒருவன் எளிதாகப் பெற்றுக்கொள்கிறான்.

ஆமை போல மெதுவாக ஓடுவதும் முயலைப் போல முதலில் வேகமாக ஓடி பிறகு களைத்துத் தூங்குவதும் எல்லாம் கதை போலவே முடிந்துவிடும்.

தனக்குரிய நெஞ்சுரத்தை (Stamina) தகுதியை, திறமையை, பயிற்சி முறையை அனைத்தும், தெரிந்து வைத்துக்கொண்டு, அதனைக் கொஞ்சங் கொஞ்சமாகப் பயன்படுத்தும் முறைதான் நெட்டோட்டத்தின் முறை களாகும்.

அவசரப்பட்டு வேகமாக ஓடுவது, ஆத்திரப்பட்டு முன்னேறிச் செல்வது, உணர்ச்சிவசப்படுவ து, பிறரை ஏளனமாக நினைப்பது, என்னால்தான் வெற்றி கொள்ள முடியும் என்று தற்பெருமை கொள்வது எல்லாம் ஓட்டத்தின் முறையையே மாற்றி அமைத்து விடும்.

ஆகவேதான், நிதானம் தேவை. எந்த இடத்தில் தன் திறமையை அதிகமாகப் பயன்படுத்த வேண்டும். எங்கு இயல்பாக இருந்து கொள்ள வேண்டும் என்று தன்னை அளக்கும் தகுதியான அறிவு தேவை. காலம், நேரம், இடம் அறிந்து முன்னேறிச் செல்கின்ற முன் உணர்வும் தேவை.

வாழ்வுக்கு வழி காட்டி இத்தனைத் திறமும், வாழ்க்கைக்கு எப்படி எல்லாம் பயன்படுகின்றன என்பதை எல்லோரும் அறிவார்கள்.