பக்கம்:விளையும் பயிர்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



நம்முடைய நேரு

ங்கள் பாட்டி எனக்கு அடிக்கடி கதை சொல்லுவாள். ராமன் கதை, கிருஷ்ணன் கதை, எல்லாம் சொல்வாள். "தசரத மகாராஜாவுக்கு மணிமணியாகக் குழந்தைகள் பிறந்தார்கள். ரத்னம் போல் ராமன் பிறந்தான்" என்று கதை சொல்வாள். கிருஷ்ணன் கதையைச் சொன்னாலும், "அவன் மணிப்பயல்" என்று சொல்வாள்.

"அதென்ன பாட்டி, மணிப்பயல், ரத்னம் போலப் பிறந்தவன் என்கிறாயே; ஏன் அப்படிச் சொல்கிறாய்?" என்று கேட்டேன்.

"ரத்னம் அதிக விலையுள்ளது, சுலபமாகக் கிடைக்காது. அது மாதிரியே ராமனைப் போலவும் கிருஷ்ணனைப் போலவும் குழந்தைகள் பிறப்பது அருமை" என்று பாட்டி சொன்னாள்.

பாட்டி சொன்னது எனக்கு நன்றாக ஞாபகத்தில் இருக்கிறது. அதுவும், நம்முடைய பாரத தேசத்துக்கே ஒரு ரத்னம் போல ஒருவர் இருக்கிறார் என்று தெரிந்தபோது பாட்டி சொன்ன கதையை மறக்க முடியுமா?

ரத்னம்போல இருக்கிறார் என்றேனே, அவர் பெயரே ரத்னந்தான். நாம் ரத்னம் என்று சொல்லுகிறோம்; அதே பேரை ஹிந்தியில் ஜவாஹர் என்று சொல்வார்கள்.

நான் யாரைப்பற்றிச் சொல்கிறேனென்று நீங்கள் தெரிந்து கொண்டிருப்பீர்களே! ஆம், ஜவாஹர்லால் நேருவைத்தான். நம்முடைய தேசத்துக்கே ரத்னம் போன்றவர் அவர் என்று எல்லோரும் சொல்லுகிறார்கள்.

ஜவாஹர்லால் நேருவின் அப்பா மோதிலால் நேரு, மோதி என்றால் முத்து. முத்தின் வயிற்றில் ரத்னம் பிறந்தது போல மோதிலால் நேருவுக்கு ஜவாஹர்லால் நேரு முதல் பிள்ளையாகப் பிறந்தார். - .

அலகாபாத் என்ற நகரத்தில் மோதிலால் பெரிய வக்கீல்; நல்ல பணக்காரர். வெள்ளைக்காரரைப்போல உடுப்புப்போடுவார். அவர்களைப்போல் இருப்பதுதான் நாகரிகம் என்று அந்தக் காலத்தில் பெரிய மனிதர்கள் நினைத்தார்கள்.


14