பக்கம்:விளையும் பயிர்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதியார் அதிகமாகப் படிக்கமாட்டார். கொஞ்சமாகப் படித்தாலும் படித்ததை மறக்கமாட்டார். ஆகையால் அவர் பள்ளிக்கூடத்தில் ஒவ்வொரு வகுப்பிலும் தேர்ச்சி பெற்று வந்தார். எட்டையபுரத்தில் சின்ன வயசில் படித்தார். பிறகு திருநெல்வேலியில் உள்ள ஹிந்து கலாசாலையில் சேர்ந்து படித்தார். ஐந்தாம் பாரம் வரையில் அங்கே படித்தார். மாணாக்கராக இருந்தாலும் அவர் பாரதியாரே அல்லவா? ஆகவே அவர் கவி பாடிக்கொண்டே இருந்தார்.

காந்திமதிநாத பிள்ளை என்ற ஒரு கனவான் பாரதியாருக்கு இருந்த புகழைக் கண்டு சகிக்கவில்லை. சின்னப் பிள்ளையாண்டான்; இவனைப் போய்க் கவியென்றும் பாரதியென்றும் உச்சாணிக்கொம்பில் தாக்கி வைக்கிறார்களே!” என்பது அவருடைய எண்ணம். ஒரு நாள் பல அறிஞர்கள் கூடியிருந்த இடத்தில் காந்திமதிநாத பிள்ளையும், பாரதியாரும் சந்தித்தார்கள். பாரதியாரை அவமானப் படுத்தவேண்டும் என்பது காந்திமதிநாத பிள்ளையின் ஆசை. அவர் பாரதியாரைப் பார்த்து, உம்மை எல்லோரும் கவிஞர் என்று சொல்கிறார்களே. நான் கடைசி அடி தருகிறேன். அதை வைத்து ஒரு வெண்பாப் பாடுவீரா?” என்று கேட்டார். பாரதியார் ஆகட்டும் என்று ஒப்புக்கொண்டார். காந்திமதிநாத பிள்ளை குறும்புத்தனமாக, அப்படியானல், பாரதி சின்னப் பயல் என்பதைக் கடைசி அடியாக வைத்துப் பாடும்” என்றார். பாடமாட்டார் என்று அவர் நினைத்தார். பாட முடியாமல் விழித்தால், "பாரதி சின்னப் பயல்: இவனைப்போய்ப் பிரமாதப் படுத்துகிறீர்களே!' என்று சொல்லலாமென்று அவருக்கு ஆசை. பாடிவிட்டால்தான் என்ன? பார்த்தீர்களா? இவரே தம்மைச் சின்னப் பயல் என்று பாடிக்கொண்டார். இவரைப் பெரியவராகச் சொல்லலாமா?” என்று வாதம் பேச லாம் அல்லவா?

இந்தக் கெட்ட எண்ணம் பலிக்கவில்லை. பாரதியார் அவ்வளவு லேசானவரா? காந்திமதிநாத பிள்ளையின் சின்னப் புத்தி பாரதியாருக்குத் தெரிந்துவிட்டது. இத்தனை பேருக்கு நடுவில் நம்மைச் சின்னப் பயல் என்று சொல்லிவிட்டதால், மகிழ்ச்சி அடைகிறார் இந்த மனுஷர். இவருக்குச் சரியானபடி பதில் கொடுக்கவேண்டும்' என்று அந்தச் சிங்கக்குட்டி நினைத்தது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விளையும்_பயிர்.pdf/37&oldid=493782" இலிருந்து மீள்விக்கப்பட்டது