சொர்ணாவூர் சொர்ணாவூரில் மகாத்மா காந்தியடிகளின் கிராமப் புனருத்தாரணத் திட்டத்தின்படி, ஓமந்தூரார் ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்தார். அந்த ஊரில் பெரிய நிலச்சுவான்தாராக உள்ள எஸ். ஆர். லெட்சுமிநாராயண ரெட்டியார் வரவேற்புக் குழுவின் தலைவராக இருந்தார். அந்த மாநாடு நடைபெறுவதற்கு எத்துணை இடையூறுகள் செய்ய முடியுமோ அத்துணையையும் போலீஸார் செய்தார்கள். கொடிமரம் ஊன்றக்கூடாது என்று போலீஸார் தடுத்துவிட்டனர். கொடிமரம் நட்டவர்களை அவர்கள் கைது செய்தனர். மாநாட்டில் தலைமைவகிக்க ஓமந்தூரார் அவ்வூருக்கு வந்தார். "தேசியக் கொடிகூடக் கட்டாமல் என்னய்யா மாநாடு நடத்துகிறீர்கள்" என்று உள்ளூர்க்காரர் களைக் கடிந்து கொண்டார். நடந்ததைச் சொன்னார்கள். "சீப்பை ஒளித்து வைத்துவிட்டால் கல்யாணம் நின்று விடுமா? கொடிமரம் ஊன்றாவிட்டால் தேசியக் கொடியை ஏற்ற முடியாதா? உங்கள் ஊரில்தான் நூற்றுக்கணக்கில் பனைமரங்கள் இருக்கின்றனவே. பனைமரத்து நுனிகளில் கொடியைக் கட்டுங் கள்" என்று சொன்னார். உடனே நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் பனைமரங்களில் ஏறி எங்கும் தேசியக்கொடியைப் பறக்கவிட்டு, “தாயின் மணிக்கொடி பாரீர்! அதைத் தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்! ” என்று பல்லவி பாடினர். ஓமந்தூரார் முகம் மலர்ந்தது; வெற்றிக் களிப்பால் சிரித்தார். அவருடைய 75 வயது வாழ்க்கையிலேயே அவர் சிரித்த சந்தர்ப்பங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். காமராஜர், ப. ஜீவானந்தம், எஸ். என். சோமயாஜுலு முதலிய தலைவர்களும் சிறந்த பேச்சாளர்களும் சொர்ணாவூர் மாநாட்டில் கலந்துகொண்டனர். மற்றும் திருமதி கோதைநாயகி அம்மாள், பிற்காலத்தில் ஜஸ்டிஸ் கட்சியின் அமைச்சரவைகளை ஆட்டிப் படைக்கும் வல்லமை பெற்றிருந்த ஜனக சங்கர கண்ணப்பர் ஆகியோர் முக்கியமான தீர்மானங்களின்மீது உரையாற்றினர். 30
பக்கம்:விவசாய முதலமைச்சர்.pdf/52
Appearance