உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வீரர் உலகம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116

வீரர் உலகம்

அறிந்து கொள்கிறார்கள். உடனே விளக்கின் திரியைக் கொளுத்தி நெல்லும் மலரும் தூவித்தெய்வத்தை வணங்குகிறார்கள். கடைவீதி முழுவதும் மாலை வந்ததை அறிந்து அந்தக் காலத்தில் செய்ய வேண்டியதைச் செய்கிறார்கள்.

வீட்டுக் கொடுங்கைகளில் ஆணும் பெண்ணுமாக உள்ள புறாக்களுக்கு இரவு பகல் தெரியவில்லை. அதனால் பறந்துபோய் வெளியிடங்களில் இரை தேடாமல் அப்படி அப்படியே நிற்கின்றன. கால் வலித்தால் காலை மாற்றிக் கொள்கின்றன. வீடுகளில் உள்ள வேலைக்காரர்கள் கத்தூரி முதலியவற்றைக்கொண்டு அமைக்கும் ஒருவகைக் கலவைப்பொருளை அரைக்கிறார்கள். இமயமலையிலிருந்து வந்த சந்தனக் கல்லும் பொதியமலையிலிருந்து வந்த சந்தனமும் கேட்பாரற்று வீணே கிடக்கின்றன. குளிர் காரணமாகப் பெண்மக்கள் தங்கள் கூந்தலில் மாலையைப் புனைந்துகொள்ளவில்லை; சில பூக்களை மட்டும் செருகிக் கொள்ளுகிறார்கள். நெருப்பை மூட்டி அதில் அகில், கற்கண்டு முதலியவற்றைப் போட்டுப் புகைக்கிறார்கள். நல்ல சிற்ப வேலைப்பாட்டையுடைய விசிறிகளை உறையிலேயிட்டு முளையிலே தொங்கப் போட்டிருக்கிறார்கள். அவற்றிற்கு இப்போது என்ன வேலை? அவற்றில் சிலந்தி கூடு கட்டியிருக்கிறது.

உயர்ந்த மாளிகைகளில் வேனிற் காலத்தில் காற்று வருவதற்காகத் திறந்து வைக்கும் சாளரங்களின் இரண்டு கதவுகளையும் இறுக மூடியிருக்கிறார்கள். வாடைக் காற்றின் குளிர் தாங்க முடியவில்லை. குவிந்த வாயையுடைய பாத்திரத்தில் தண்ணீர் அடிக்கடி எடுத்து முன்பெல்லாம் வைத்திருப்பார்கள்; அதை குடிப்பார்கள். இப்போது யாரும் அதன் பக்கமே போவதில்லை. கணப்பிலுள்ள நெருப்பையே சாப்பிட்டு விடுவார்கள் போலிருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/123&oldid=1847919" இலிருந்து மீள்விக்கப்பட்டது