12
வீரர் உலகம்
வழியைச் சுவட்டினால் அறிந்து அந்த வழியே சென்றார்கள் வீரர்கள். அவர்கள் நடையில் மிடுக்கு ஒளிர்ந்தது. அவர்கள் கையில் வேல்கள் மின்னின. எங்கே பகைவரைக் கண்டாலும் அங்கே மடக்கி அவரைச் சாய்க்க வேண்டும் என்ற துடிதுடிப்புடன் நடந்தார்கள்.
இதோ புழுதி தெரிகிறது; ஆரவாரமும் கேட்கிறது. ஆநிரையை வளைத்துச் சென்றவர்களின் கூச்சல்தான் அது. விரைவில் அவர்களைச் சுற்றி வளைக்க ஓடினார்கள்; அவர்களை அண்டி மோதினார்கள். சிங்கமும் சிங்கமும் யானையும் யானையும் பொருவதுபோல இரண்டு பக்கத்து வீரர்களும் எதிர்த்துப் போரிடத் தொடங்கினார்கள். தம்முடைய நாட்டுச் செல்வமாகிய ஆநிரைகளைக் கொண்டு சென்ற கள்வர் இவர் என்ற சினத்தால் அவற்றைத் தேடி வந்த வீரர்கள் மிடுக்குடன் போர் செய்தார்கள். தேனீக் கூட்டைக் கலைத்துவிட்டவர்களின் கதியை அடைந்தார்கள், பசுக்களைக் கொண்டு சென்றவர்கள்.
பசுக்களை மீட்ட பிறகே வீட்டுக்கு வருவோம் என்று சபதம் செய்துகொண்டு வந்த மறவர்களின் வீரத்தை என்னவென்று சொல்வது! சமயம் வரும்போதுதான், இன்னாரிடம் இன்ன வலிமை இருக்கிறது என்பது தெரிய, வரும்.
ஒவ்வொரு வீரனும் ஒவ்வொரு வகையில் வீரச் செயலை ஆற்றுகிறான்.
ஒரு வீரனைப் பலர் சூழ்ந்து கொண்டார்கள். அவன் பசுமாடுகளை மீட்டுத் தன் நாட்டுக்கு அனுப்பிவிட்டான். அந்த நிலையில் அவனைப் பகைவர் சுற்றி நின்று மொய்த்தார்கள்; வெங்கணை ஏவினார்கள். அவன் பலரை மாய்த்து, வீர மரணம் எய்தினான்.