பக்கம்:வீர காவியம்.pdf/34

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

31

காட்சிப் படலம்

இயல் 13

விழிவேலால் தாக்குண்ட வேழன் ஆங்கே
விளம்பரிய காதலெனும் நோயில் வீழ்ந்தான்.

விழிக்கடையால் அவன்விழியைத் தாக்கி, நெஞ்சில்
      வேதனையை உருவாக்கி நின்ற பாவை,
விழித்திமையா முனம்மறைந்தாள்; மறைந்தா ளேனும்
      வீரன்றன் மனத்தகத்து நிலைத்து நின்றாள்;
வழிக்கதவந் திறந்தகல்வாள் காற்சி லம்பும்
      வளையொலியும் இருசெவிவிட் டகல வில்லை;
பழச்சுளையின் செவ்விதழில் தவழ்ந்த மூரல்
      பார்வையைவிட் டணுவளவும் மறைய வில்லை.41

கற்பனையில் அவையெல்லாம் மீண்டும் மீண்டும்
      காட்சிதரக் கனிந்துருகிப் புலம்பும் வீரன்,
‘பொற்பதுமை இவள்தானோ? வடிவ மென்ன
      பூங்கொடியோ? முழுமதியோ இவள்மு கந்தான்?
முற்படுமவ் விளையமகள் என்னை வென்றாள்!
      முழுவலியும் இழந்திங்குத் தளர்ந்து விட்டேன்;
பற்பலபோர் வென்றிருந்தும் இவ் ணங்கின்
      பார்வைக்கு மனமுடைந்து தோற்று விட்டேன்!42


மூரல் - புன்னகை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/34&oldid=911498" இருந்து மீள்விக்கப்பட்டது