பக்கம்:வெங்கலச் சிலை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11

சி. பி. சிற்றரசு


வஞ்சனை, களவு, கோள், கொடுமையில்லாமல் வாழ வேண்டும். காற்று, மழை, பனி, குளிர், கதிரவன் சுடர், நிலவொளி, நீலக்கடல், பசி, தாகம், தூக்கம், சுகம் ஆகியவைகள் பொதுவாயிருப்பதைப்போல், உழைப்பு, ஊதியம், வாழ்வு, வசதி, வளம் எல்லாம் எல்லார்க்கும் பொதுவாக வேண்டும். அதற்கோர் திட்டம் வகுத்துத் தந்தான் பொது உடமைத் தந்தை காரல் மார்க்சு என்ற பேரறிஞன். அவை இதோ, என சுயநலத்தால் சேமித்த செல்வப் பெருமைக்குச் சாவோலையை நீட்டிய புரட்சிப் புயல் லெனின் அவர்களின் வெங்கலச்சிலை.

எவ்வளவோ சிலையைச் செதுக்கி இருப்பார்கள் இன்பத் தொழிலாளிகள். ஆண்டவன் சிலையைச் செப்பனிட்ட தொழிலாளி என்ன நினைத்திருப்பான். ஏ! ஆண்டவா! எவ்வளவோ கஷ்டத்துக்கிடையே என் வியர்வையால், உன்னை அன்றாடம் அபிஷேகம் செய்கின்றேன். இப்போது, நான் உன்னை எது வேண்டுமானாலும் செய்யலாம். தொடலாம், மிதிக்கலாம், உளிகொண்டு தாக்கலாம். உதவாது என்று தூக்கித் தூர எறியலாம். ஆனால், உன்னை அர்ச்சகனிடம் ஒப்படைத்த பின், நான் அண்ட, ஆசையாகத் தொட, நாம் செய்த சிலையாயிற்றே என்று அன்பினால் அணைத்துப் பிடிக்க முடியாதே. மூடச் சமூகத்தின் திரையிடப்பட்டு விடுமே. மத ஓடத்தில் ஏறிய மாந்தரின் கண்கள் கனல் கக்குமே என்று எண்ணியவாறு செய்திருப்பான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெங்கலச்_சிலை.pdf/11&oldid=1315738" இலிருந்து மீள்விக்கப்பட்டது