பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

121

ஜேம்ஸ் ஆலன்


வேண்டுமென்ற விருப்பமே ஒரு மோசடி. அது எண்ணிறந்த மோசடிகளைச் செய்ய வழி கோலுகின்றது. மேலும் உண்மையான கவர்ச்சிகளும், குணவியல்புச் சிறப்புகளும் தம்மிடம் இல்லாதிருப்பதைத் தாம் உணருவதால், அதற்குப் பகரமான ஒன்றை நாடுதலையே அந்நிலை உணர்த்துகின்றது. ஆனால், மன அழகிற்கும், குணவியல்பு வலிமைக்கும் பகரமே கிடையாது. திறமையைப் போன்றே கவர்ச்சியும் பற்றுக்கொள்வதாலேயே பறிபோய்விடுகின்றது.

குணவியல்பைப் பொறுத்து மிகுதியான திண்மையும், ஆர்வமும் கொண்டு நாடுவோரே அதைப் பெற்று நுகருகின்றனர். நாம் ஆர்வம், என்றழைக்கின்ற மனநிறைவும், நெஞ்ச முழுமையும், கொண்ட கவர்ச்சி ஆற்றலுக்கு ஒப்புமை கூற மனித இயல்பின்கண் எதுவுமே இல்லை. மெய்யார்வமுடைய ஆண்மகனையோ பெண்ணையோ பொறுத்து என்றென்றும் நிலைக்கின்ற ஒரு கவர்ச்சிக் கூறுள்ளது. அவர்கள் தம்மை மனித இயல்புக்குச் சிறந்த எடுத்துக் காட்டுகளாகத் தோற்றுவிக்கின்றனர். மெய்யார்வம் தவிர்ந்த தனிமறைக் கவர்ச்சிக் கூறு வேறதுவுமே இருக்க இயலாது. அறிவு மயக்கம் இருக்கலாம்; இருக்கவே செய்கின்றது. அறிவு மயக்கம் துன்பந் தோய்ந்த மருட்சி நீக்கத்தில் முடிவுறுகின்றது. ஆனால், மெய்யார்வம் கொண்ட உயிர்களிடையே எதுவுமே மறைக்கப் படாததாலும், அவர்கள் மெய்ம்மை என்னும் திண்மையான நிலத்தளத்திலே நிலைபெற்றிருப்பதாலும், மடியச் செய்யப்பட வேண்டிய மருட்சி எதுவுமே கிடையாது.