பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

49

ஜேம்ஸ் ஆலன்


இனிமை நாட்டத்திலும் காலத்தைக் கழிப்பவன், விரைவில் முதுமைப் பருவத்தை எய்தி விடுகின்றான். அவன் எதையும் சாதித்து நிறைவேற்றுவதில்லை. வந்து போகின்ற நிமியங்களைப் பயனுடைய நாட்டங்களால் நிறைவாக நிரப்புபவன் புகழிலும், அறிவிலும் முதுமையடைகின்றான். ஆக்கம் அவனிடம் நிலைப்பேறு கொள்கின்றது. பாழ்படுத்தப் பட்ட பணத்தை திரும்பப் பெற்றுவிடலாம்; ஆனால் பாழ்படுத்தப்பட்ட காலத்தை என்றுமே திரும்பப் பெறமுடியாது.

“காலம் பொன்னாகும்” என்பது ஒரு முதுமொழி. அதேபோன்று, அதனைப் பயன்படுத்துகின்ற வகையைப்பொறுத்து அது நலம், வலிமை, திறமை, சான்றாண்மை, அறிவு முதலியவையுமாகின்றது. அதைச் சரிவரப் பயன்படுத்த வேண்டிடுமெனின் வருகின்ற நொடிகளை நன்கு பயன் படுத்திக் கொள்ளவேண்டும்; ஏனெனில், ஒரு முறை அவை கடந்து சென்றுவிடின், என்றுமே அவற்றைத் திரும்ப வரவழைத்துக் கொள்ள முடியாது. நாள் பொழுதைப் பகுதிகளாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். உழைப்பு, ஓய்வு, உணவு, பொழுதுபோக்கு ஒவ்வொன்றையும் குறித்த பொழுதில் செய்தாக வேண்டும். ஆயத்தம் செய்வதற்கான பொழுதைத் தவிர்க்கவோ புறக்கணிக்கவோ கூடாது. தனது பணிக்குத் தனது மனத்தை ஆயத்தம் செய்து கொள்வதற்காக நாட்பொழுதின் ஏதேனும் சிறுபகுதியைப் பயன்படுத்துவதின் மூலம் ஒரு மனிதன் எதைச்செய்வதெனினும் சரியே; அதை நன்முறையிலும், மிக வெற்றிகரமாகவும் செய்து முடிப்பான்.