பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

130

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

அவன் ஓரளவு நிம்மதியடைந்தான். பழைய கவலைகள் நீங்கின. கவலை நீங்கவே முழு மகிழ்ச்சியுடன் உண்டாட்டு விழாவில் கலந்து கொண்டு அதைச் சிறப்புற நிகழ்த்தலாயினான். நண்பரும் துயர் நீங்கி உவகை பெற்றனர். இலாவாரண மலைச்சாரலில் பொழுது இன்பமாகக் கழிந்து கொண்டிருந்தது.

மலைச் சாரலில் அங்கங்கே இருந்த சுனைகளில் நீராடியும் சுவையுணவுண்டும் பூப் பல கொய்தும் பொழுதைக் கழித்தனர். மூங்கில் வெடித்ததனால் வீழ்ந்த முத்துக்களைப் பதித்துச் சிற்றில் இழைத்து விளையாடினர் சிறுமகளிர். குரவம் பூவைக் கொய்து, பாவை விளையாட்டும் விளையாடினர். அம்மானைப் பாடலும் வள்ளைப் பாடலும் பாடிச் சிலர் ஆடப் பலர் கண்டுங் கேட்டும் மகிழ்ந்தனர். காதலர் இருதலைப் புள்ளின் ஓருயிர்போல இணைபிரியாத உண்டாட்டு அயர்ந்து உவந்தனர். இவ்வாறு உண்டாட்டு விழா நிகழ்ந்து வரும் நாள்களில் ஒருநாள் மலைச்சாரல் வழியாகத் தன் போக்கில் உலவச் சென்ற உதயணன் மிக்க அழகான இயற்கைச் சூழ்நிலையில் அமைந்திருந்த ஒரு தவப் பள்ளியை அடைந்தான். அவ்வாறு உலாவிய வண்ணம் சென்று கொண்டிருந்த அவனோடு இடையிலே தத்தை, காஞ்சனமாலை, வயந்தகன் முதலியோரும் வந்து சேர்ந்து கொண்டனர். மிக்க எழிலோடு கூடிய பல சோலைகளை அந்த ஆசிரமத்தைச் சுற்றிக்கண்ட வாசவதத்தையும் காஞ்சனையும் உதயணனிடம் கூறிவிட்டுச் சோலைகளின் வளங் காணச் சென்றுவிட்டனர். உதயணன் வயந்தகனுடனே அங்கிருந்த பெரிய அசோக மரமொன்றின் நிழலில் அமர்ந்தான். உடன் வந்த இரண்டோர் படை வீரர்களும் தனியே அகன்று போயிருந்தனர். மலைச் சாரலின் அழகைக் கண்டு மகிழ்வதற்கு வாய்த்த அந்த இனிய சூழ்நிலையில் அங்கே தனியாக உதயணன் அமர்ந்திருந்தான். சோகங்கள் நீங்கப் பெற்றவன் அப்போது அசோக மரத்தடியிலே அமர்ந்தது மிகவும் பொருத்தமாக இருந்தது.