பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

நாடகத்தை உற்றுக் கவனிப்பதற்குள் தத்தை, உதயணன் இருவருமே தத்தம்நிலையை உணர்ந்து கொண்டனர். கண்கள் திரும்பினவே யொழிய ஒருவர் மனம் மற்றொருவரிடமிருந்து திரும்பவில்லை. திருப்பவும் முடியவில்லை. உதயணன் மனம் தத்தையிடம் உறவுகொண்டு திரும்ப மறுத்துவிட்டது. தத்தையின் மனமோ அவளுடைய தாபத்தைச் சிறிதும் பொருட்படுத்தாது உதயணனிடமே தங்கிவிட்டது. தத்தையும் உதயணனும் பிரிந்தனர். தனிமை அவர்களுக்குத் தந்த பரிசு வேதனை.

உதயணன் பால் அன்பும் இரக்கமும் பூண்ட பிரச்சோதனனின் உள்ளம், இப்போது அவனைக் கைதியாகவோ பகைவனாகவோ கருத மறுத்தது. அவன் உதயணனுக்காகப் புதிய அரண்மனை யொன்று அமைக்கச் செய்தான். அஃது அழகிலும் அமைப்பிலும் சிறந்து விளங்கியது. அரண்மனை யானைகளைக் கட்டும் குஞ்சரச் சேரிக்கு அருகில் கம்பீரமாகத் தோற்றமளித்த அந்த அரண்மனையில் ஓர் இளவரசனுக்கு வேண்டிய வாழ்க்கை வசதிகளை யெல்லாம் உதயணனுக்குக் குறைவற அமையும்படி செய்தது, அவந்தியர் கோமான் ஆணை. ஆத்திரம் அன்பாக மாறிவிட்டால் அதற்கு அழிக்க முடியாத வன்மை தோன்றிவிடுகிறது. தனக்கு மாற்றவனாகிய உதயணனை எந்திர யானையால் ஏமாற்றிப் பிடிப்பதுபோலப் பிடித்து வந்து இருட்சிறையில் அடைத்தான் பிரச்சோதனன். நளகிரி மதமுற்றபோது யாராலும் அடக்க முடியாத இறுதி நிலையில் உதயணனுக்கு மட்டும் அந்த யானையை அடக்கும் ஆற்றல் உள்ளது என்னும் செய்தியைச் சாலங்காயன் மூலமாக அறிந்த பிரச்சோதனன், உதயணன் முகத்தில் விழித்து அந்த உதவியைக் கேட்பதற்கே நாணினான். பிறகு சிவேதன் திறனால் உதயணன் அந்த உதவி செய்ய நேர்ந்தது. இப்போது உதயணனைத் தன் மூத்த அரசிளங்குமரன் போன்று எண்ணிப் போற்றும் மனநிலை, முன்பு மாற்றவனாக இருந்த பிரச்சோதனனுக்கு ஏற்பட்டுவிட்டது. மனம் நடிப்புத் திறன் வாய்ந்த ஒரு நடிகன். சூழ்நிலை அதற்கு ஏதேதோ பற்பல