பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மறுபடியும் போர்

235

தவிர்க்க முடியவில்லை. “உதயணன் எப்போதும் நமக்குத் தீமை நினையாதவன். அவன் கூறியனுப்பியிருப்பதை நாம் உறுதியாக நம்பலாம். நம் படைகளை அவனோடு துணைக்கு அனுப்புவதில் எந்தவிதமான தவறும் கிடையாது. இது பற்றி உங்கள் கருத்து என்ன?” என்று அவன் தன் அவையோர்களைக் கேட்டான். “என்ன இருந்தாலும் நமக்கு உதயணன் வேற்றவன்தானே! எதற்கும், அவன் இவ்வாறு கூறியனுப்பி இருப்பதின் உட்கருத்து எதுவாக இருக்கலாம் என்பதைத் தீர ஆராய்ந்தால் ஒழிய, நாம் இதற்குச் சம்மதிப்பது கூடாது” என்று தருசகனின் அவையைச் சேர்ந்த அறிஞர்கள் அவனுக்குக் கூறினர். ஆனால் தருசகனோ, அவர்களுக்கு உதயணனைப் பற்றிக் கூறித் தக்க சமாதானங்களை எடுத்துச் சொல்லிவிட்டான். “நம்மைவிட உதயணன் பகைவர்களை விரட்டுவதில் சூழ்ச்சித் திறம் மிக்கவன். அவனால் நமக்குத் தீமைவரும் என்பதை நாம் கனவிலும் எண்ண வேண்டியதில்லை” என்று அவன் முடிந்த முடிபாகச் சொல்லியபோது, அவர்கள் மேலும் மறுத்துப் பேச முயலவில்லை. உடனே தருசகன் படைத் தளபதிகளை வரவழைத்து எல்லாப் படைகளையும் போருக்கு ஆயத்தம் செய்ய வேண்டுமென்று அவர்களுக்குக் கட்டளையிட்டான். வயந்தகன் இன்னும் அங்கேயே இருந்தான். தன் தூது வெற்றி பெற்றதற்கு அறிகுறியாக அவன் முகம் மலர்ந்தது. தளபதிகள் படைகளை ஆயத்தம் செய்வதற்குப் புறப்பட்டனர்.

45. மறுபடியும் போர்

ங்கு நிலைமை இவ்வாறு இருக்கும்போது, அரண்மனையில் திருமணம் பேசி வந்து முன்பே விருந்தினனாகத் தங்கியிருந்த கேகயத்து அரசன் அச்சுவப் பெருமகனுக்கும், இச் செய்திகள் பராபரியாகத் தெரியலாயின. இந்த நிலையில் விருந்தினனாகத் தங்கித் திருமணப் பேச்சோடு வந்திருந்தாலும் தருசகனுக்கு உதவாமல் இருந்துவிடுவது ஆண்மைக்கும் தன் உறவு நோக்கத்துக்கும் அழகல்ல என்றெண்ணி