பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பதுமையின் பாக்கியம்

267

மனப்பூர்வமான நம்பிக்கையையும் உடன்பாட்டையும் யாப்பியாயினி அறிந்து கொண்டாள். இவ்வாறே சில நாள்கள் கழிந்தன. இதற்குள் உதயணன், பதுமை திருமணத்திற்குத் தருசக மன்னன் ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தான்.

அரண்மனைச் சேனைப்பெருங்கணியார், திருமணத்திற்கென நல்ல நாள் ஒன்றைக் குறிப்பிட்டுக் கூறியிருந்தார். வழக்கத்தின்படியே மகதவேந்தனின் தங்கைக்குத் திருமணம் நிகழ இருக்கும் அந்தச் செய்தி, நகர் எங்கும் வள்ளுவர்களால் அறிவிக்கப் பெற்றது. பிறநாட்டு மன்னர்களுக்கு மணத் தூதுவர்கள் போக்கப் பெற்றனர். இராசகிரிய நகரம் கோலாகலமான அலங்காரச் சிறப்புக்களை அடைந்து பொலிவு பெற்றது. அங்கங்கே நகரில் திருமண நிகழ்ச்சி நடைபெறுகிறது என்பதை அறிவிக்கும் மங்கலக் கொடிகள் உயர்ந்து தோன்றின. குறித்த நாளில் எல்லா வகைச் சிறப்புக்களோடும் பதுமை-உதயணன் திருமணம் நிகழ்ந்தது. அவர்கள் இருவரும் உலகறிய மணம் புரிந்துகொண்ட காதலர்களாயினர். திருமணம் முடிந்தபின் பதுமைக்கும் உதயணனுக்கும் நாள்கள் களிப்பு மயமாகக் கழிந்தன. பதுமையும் உதயணனும் ஒருவருக்கொருவர் புதியவர்கள் அல்லர். அவர்கள் காதல் கொண்டதும் மனம் கலந்ததும் ஆகியவை கூட முன்னைய நிகழ்ச்சிகளே! ஆனால், உலகறியாதவை அவை. அவர்களது உள்ளங்கள் மாத்திரமே அறிந்தவை! ஆனால் இப்போது அவர்கள் மணமானவர்கள். திருமண உரிமையோடு நுகர்கின்ற வாழ்வு இது. இந்த இன்பமயமான பொழுதின் இடையே, துன்பமுற்றிருக்கும் நண்பனை அவன் மறக்க முடியவில்லை. அதையும் நினைத்து வேதனைப்பட்டான் உதயணன்.

போரில் எலிச்செவியரசனிடம் சிறைப்பட்ட உருமண்ணுவாவை எவ்வளவு விரைவில் அங்கிருந்து மீட்க முடியுமோ அவ்வளவு விரைவில் மீட்க வேண்டும் என்று நினைத்து அதற்கான திட்டங்களை இடையறாது எண்ணிக் கொண்டிருந்தான். இவ்வாறு இருக்கையில் தருசகனோடு