பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

பல தேவியர்கள் பெற்ற, பேதைப் பருவத்து மகளிர் எல்லோரையும் தன்பால் வரவழைத்து அவருள் யாவர் உதயணனிடம் யாழ் கற்கத் தகுந்தவர் என ஆராய்வதுபோல் ஆராய்ந்து, வாசவதத்தையே தக்கவள் எனத் தேர்ந்தெடுத்தான். விதி முழுதும் வென்றது. உதயணனுக்குச் சாதகமாகவே வென்றது. உதயணன் எவளைச் சந்திக்கலாம் என்பதற்காக யாழ் கற்பிக்க இணங்கினானோ, அவளே யாழ் கற்பவளாக வாய்த்திருப்பது அவனுக்குத் தெரியவில்லை.

4. திரை விலகியது

த்தை யாழ் கற்க வேண்டிய நல்ல நாள் விரைவிற் குறிப்பிடப் பெற்றது. தன்னுடைய பிற புதல்வியருக்கு ஏற்ற பரிசுகளைக் கொடுத்து வருந்தாதபடி செய்தான் பிரச்சோதனன். உதயணனிடம் வீணை கற்கும்பேறு தத்தைக்கே தக்கதெனப் பலரும் பாராட்டி மகிழ்ந்தனர். யாழ் கற்க ஏற்ற கீதசாலை கட்டி அலங்கரிக்கப்பட்டது. தத்தையின் கலைக் கல்விக்கு வேண்டிய வசதிகள் யாவும் செய்யப்பட்டன. குறித்த மங்கல நன்னாள் வந்து சேர்ந்தது. வாசவதத்தையை அவளுடைய ஆயத்தார் நன்றாக அலங்கரித்தனர். கலை மகளைக் கற்று அறியத் திருமகள் செல்வதுபோல, அவளைக் கீதசாலைக்கு உதயணனிடம் யாழ் கற்க அழைத்துச் சென்றனர் தோழியர். காதில் குண்டலம் அசையக் காலிற் சிலம்பொலிப்பக் கீதசாலையுள் சென்றாள் தத்தை, கீதசாலையில் யாழ் கற்பிக்கவேண்டிய மேடையில் ஆசிரியனிருந்து கற்பிப்பதற்கும், அதற்கு எதிரே கற்பவள் அமர்ந்து கற்பதற்குமாக இரண்டு இருக்கைகள் பொன்னிலும் மணியிலும் இழைத்துச் செய்யப்பட்டிருந்தன. இரண்டிற்கும் இடையே ஓர் அலங்காரமான மெல்லிய பட்டுத் திரைச்சீலை ஒளிவீசிக் கொண்டிருந்தது. அதனால் கற்பவளும் கற்பிப் பவரும் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொள்ள முடியாதிருந்தது. தத்தை, திரைக்குப் பின்னாலே கற்பவள் அமர வேண்டிய இருக்கையில் அமர்த்தப்பட்டாள். கற்கின்ற முதல் நாள் இப்படித் திரையிட்டு அதை விலக்கியபின், கற்பார்