பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதியதொரு சூழ்ச்சி

281

யாவும் உண்மைதான் என்று உதயணன் நம்பினான். கோசாம்பி நகரத்துக் கோட்டையில் ஆருணி புதிதாகச் செய்திருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மற்ற விவரங்களையும் ஒற்றர்கள் சொல்லக் கேட்டபின், நள்ளிரவில் கோட்டைக்குள் நுழைந்து கலகம் விளைவிக்கும் திட்டம் ஒத்துவராது என்பது உதயணன் முதலிய மூவருக்கும் தெரிந்தது. உதயணன் ஆழ்ந்து சிந்தித்தான்; ‘வேறு எந்த வகையில் இந்த ஆருணியை வெல்லலாம்?’ என்று பல விதமான எண்ணங்களால் சூழ்ந்து எண்ணினான். முடிவில் அவனுக்கு ஒன்று தோன்றியது!

“இரவில் அரண்மனைக்குள் நம்மவர்களை அனுப்பி வெளியே படைகளுடனே வளைத்திருந்து வென்றுவிடலாம் என்று நாம் எண்ணியிருந்தது இனிமேற் பயன் பெறாது! ஆருணி, இப்போது இருக்கும் சூழ்நிலையில் அரண்மனை, கோட்டை முதலியவற்றில் மிகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருப்பதாகத் தெரிகிறது. நாம் படையோடு அவனை வளைக்கத் தொடங்கும் நேரத்தில், அவன் உதவி வேண்டித் திருமுகம் அனுப்பியிருக்கும் சங்க மன்னர்களில் யாராவது துணைக்கு வந்து அவன் பக்கம் சேர்ந்து கொண்டால், நமது நினைவு சித்தியடைவதற்கும் வழியே இல்லை. எனவே, இப்போது வேறோர் புதிய சூழ்ச்சியை நாம் மேற்கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம்” என்று கூறிவிட்டு, எதிரே அமர்ந்திருந்த வருடகாரனையும் இடவகனையும் அவர்கள் கருத்தை முகக் குறிப்பால் அறியும் நோக்கத்தோடு பார்த்தான் உதயணன்.

வருடகாரனும் இடவகனும் சம்மதத்திற்கு அறிகுறியாகத் தலையசைத்தனர். உதயணன் வருடகாரனைக் குறிப்பாகத் தன் அருகில் நெருங்கி வருமாறு கூறினான். அவன் வந்ததும் தன் கருத்தை அவனிடம் விவரிக்கலானான். “வருடகார! இப்போது உன்னை அடிப்படையாகக் கொண்டே என் மனத்தில் இந்தப் புதிய சூழ்ச்சியை உருவாக்கியிருக்கிறேன். இந்தப் புதிய சூழ்ச்சியும் உன்னுடைய