பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெற்றி முழக்கம்

295

மென்று அவன் கூறினான். நண்பர்களும் அதற்கு இசையவே, ஆருணியின் சடலத்தை ஈமக்கடன்கள் இயற்றி அடக்கம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு முடிந்தது. ஆருணி முறைப்படி செய்யப்பட வேண்டிய ஈமக்கடன்களைச் செய்யப் பெற்றான்.

அழிந்ததுபோக எஞ்சிய ஆருணியின் படைகளைத் தன் வசத்தினவாக ஆக்கிக்கொண்டு உதயணன் முதலியவர்களைப் பின்னால் வருமாறு கூறிவிட்டுக் கோசாம்பி நகரத்துக் கோட்டை வாசலைத் திறப்பதற்காக முன்னால் சென்றான் வருடகாரன். ஆனால், கோட்டைக்குள்ளே இருந்தவர்கள் உட்புறமாகக் கதவை அடைத்துத் தாழிட்டுக்கொண்டு திறக்க மறுத்துவிட்டனர். “மக்களே! நீங்கள் அஞ்சவேண்டாம். உங்கள் பழைய அரசனாகிய உதயணன், ஆருணியை வென்று, கோசாம்பி நகரத்தைக் கைப்பற்றிக் கொண்டான். ஆகவே பழைய அரசன் மீண்டும் திரும்பி வருகிறான் என்ற மகிழ்ச்சியோடு கோட்டைக் கதவைத் திறவுங்கள்” என்று உள்ளே இருப்பவர்களுக்கு வருடகாரன் அறிவித்தான். வருடகாரன் இவ்வாறு அறிவித்த பின்பும், கோட்டைக்குள் இருந்தவர்கள் கதவைத் திறக்கவில்லை.

‘உதயணன் வெற்றி அடைந்துவிட்டான்; கதவைத் திறவுங்கள் என்று கூறுபவன், உதயணனுக்குப் பகைவனாக மாறிய வருடகாரன் அல்லவா? இவனை நம்பி நாம் எவ்வாறு கதவைத் திறக்கலாம்? என்ன சூழ்ச்சி நடக்குமோ?’ என்று அவர்கள் அஞ்சினர். இதற்குள் உதயணன், இடவகன் முதலியவர்களும் அங்கே கோட்டை வாசலுக்கு வந்து சேர்ந்தனர். எல்லோரும் கதவு திறப்பதற்காகக் காத்துக் கொண்டிருந்த அந்தச் சந்தர்ப்பத்தில் இது நிகழ்ந்தது.

“உதயணன் வந்திருக்கிறான் என்பதற்கு அடையாளமாக அவனுடைய இராச முத்திரையை உள்ளே அனுப்பித்தால் கதவை நாங்கள் உடனே திறந்துவிடுகிறோம்” என்று உள்ளே இருந்தவர்கள் கூறி அனுப்பினார்கள். உதயணன் இதைக் கேட்ட உடனே இடவகனைப் பார்த்து, “இடவக! கோசாம்பி