பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

ஆசிரியனாகவும் மாணவியாகவும் சூழ்நிலையை வெளிப்படையாக ஆக்கி வைத்திருக்கும்போது இருவரும் இந்தக் காதல் நாடகம் நடிக்க முடியாதல்லவா? உதயணன் யாழைக் கையிலெடுத்துக் கற்பிக்க ஆரம்பித்தான். தத்தை மீண்டும் முறைக்காக அவனை வணங்கிக் கற்க ஆரம்பித்தாள். தத்தையின் ஆயம் அவளைச் சூழக் காவலாக இருந்து கொண்டு கவனித்தது. மாரன் மலர்க்கணைகள் முழுவதையும் தத்தையிடம் எய்து பழிதீர்த்துக் கொண்டபோது, மனம் யாழில் போகுமா? முதல் நாளாகையாலும் உதயணன் மன நிலையிலும் ஏறக்குறைய அதே மனவேதனை ஏற்பட்டிருந்ததாலும், விரைவாக யாழ் கற்பிப்பதை முடித்துவிட்டுப் பிரியாமற் பிரிந்தான் அவன். சந்தேகத்திரை விலகப் பெற்ற இருவரும், மறுபடி தாபத்திரை மூடப்பெற்றுப் பிரிந்து சென்றனர்.


உதயணன் தத்தைக்குத் தொடர்ந்து யாழ் கற்பித்து வந்தான். அதனுடன் போட்டி போட்டுக்கொண்டு அவர்களுடைய கண்கள் காதல் கற்பனையை வளர்த்து வந்தன. பிரச்சோதனன் செய்த இந்த ஏற்பாடு, ஊரார் தங்களுக்குள் கூடிக் கூடிப் பழிமொழி பேசும்படி செய்துவிட்டது. ஆனால் அவற்றை அரசன் அறியாதபடி அஞ்சி முணுமுணுக்கத் தொடங்கியது ஊர். 'சிறை செய்யப்பட்டு வந்த பகையரசன் உதயணன், வாலிப வயதினனுங்கூட. அவனைக் கொண்டு பருவம் வந்த தன் மகளுக்கு நம்பிக்கையுடன் யாழ் கற்பிக்கச் செய்த மன்னனுக்கு அறிவு மங்கிவிட்டதோ? பகைவனை நம்பிப் பெற்ற மகளை ஒப்புவிக்கிறானே?' என்னும் பழிமொழி ஊரெங்கணும் எழுந்தது. ஆனால் அரசன் ஆணைக்கு அஞ்சி மறைவாகப் பரவிவந்தது இந்தப் பழிமொழி.


வேந்தன் அறியின் வெஞ்சினம் கொள்வான்; ஆகையால், வாய் திறந்து பேசாமல் நகரில் காதும் காதும் வைத்தாற் போலப் பெருகிப் பரவியது இந்தப் பேச்சு. ‘ஆசிரியனாக வந்த உதயணனும் அரசன். கற்பவளாகிய வாசவதத்தையும் அரசன் மகள். இருவரும் திருமணப்