பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

302

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

ஒரு நல்ல நாளில் பதுமாபதி, கோசாம்பி நகரத்து அரண்மனை அந்தப்புரத்திற்கு வந்து குடி புகுந்தாள். உதயணன் அந்தப்புரத்தைச் சேர்ந்த கட்டிடங்களைப் பதுமைக்காக மேலும் அழகுபடுத்திப் புதுப்பித்திருந்தான். மகத மன்னனின் தங்கை பதுமாபதி, இராசகிரிய நகரத்தின் பெரிய அரண்மனையினும் இந்தப் புதிய அரண்மனையின் அந்தப்புரம் எழில் ஒங்கி விளங்குதல் கண்டு இதை வியந்தாள். நாட்டிலே நல்லாட்சியும், பதுமையுடன் கூடிய இன்ப வாழ்வுமாகத் தன் நாள்களை அமைதியும் பயனும் நிறைந்தனவாகச் செலவிட்டு மகிழலானான் உதயணன்.

கோசாம்பியின் ஆட்சியை அடைந்து இவ்வாறு அமைதியாக வாழ்ந்து வருங்கால், ஒருநாள் அவனுக்குப் பத்திராபதியின் நினைவு உண்டாயிற்று. தன்னையும் வாசவதத்தையையும் சுமந்துகொண்டு உஞ்சை நகரின் நீராடல் துறையிலிருந்து இரவு என்றும் பகல் என்றும் பாராமல் ஓடி வந்து, அந்த யானை வருகின்ற வழியில் இறந்துபோன நிகழ்ச்சியும் கூடவே அவன் நினைவில் தோன்றி உள்ளத்தை உருக்கியது. பத்திராபதி தனக்குச் செய்திருக்கும் நன்றியின் அளவை உள்ளுற நினைத்துப் பார்த்தபோது, எப்படியாவது அந்த நன்றிக்கு அழியாத கைம்மாறு ஒன்று செய்தால் ஒழியத் தன் மனம் திருப்தியுறாது என்று அவனுக்குத் தோன்றியது. இந்த நினைவு ஏற்பட்டவுடனே, காட்டுப் பகுதிகளில் நன்கு பழக்கமுள்ள சிலரை அழைத்துப் பத்திராபதியைத் தான் புதைத்துவிட்டு வந்த இடமும் வழியும் முதலிய விவரங்களைத் தெளிவாகக் கூறி, அந்த இடத்தை அடையாளங்கண்டு அங்கே அகப்படும் அதன் எலும்பு முதலிய பொருள்களை எவ்வாறேனும் தேடிக் கொண்டுவருமாறு கூறினான். அவர்களும் இயன்ற வரையில் தேடிப் பார்த்துக் கொண்டுவர முயற்சி செய்வதாகக் கூறிவிட்டுச் சென்றனர்.

செலுத்த வேண்டியதொரு நன்றியைச் செலுத்தி அமைதியுறாமல், அதைத் தாங்கி மனத்துக்குள்ளேயே வைத்துக் கொண்டிருப்பது என்பது பண்புடையோருக்கு மிகப் பெரிய