பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நன்றியின் நினைவுச் சின்னம்

303

சுமையாகத் தோன்றும். அந்தச் சுமையை உள்ளன்போடு செய்து கழித்தால் ஒழிய, அவர்கள் மனப்பாரம் குறைந்துவிடுவது இல்லை. நன்றிக்கு ஏற்ற இடத்தில் நன்றியைச் செலுத்தத் தவறக்கூடாது’ என்பது சிறந்த பண்பாட்டுக்கு உரிய சின்னங்களில் ஒன்று அல்லவா? உதயணனும் இத்தகைய பண்பாடு நிறைந்தவன். ஆகையால்தான் என்றோ பல நாள்களுக்குமுன் நடந்த அந்தச் சம்பவத்தை நினைவுபடுத்திக் கொண்டதோடு அல்லாமல், பத்திராபதி என்னும் யானைக்கு என்றும் நிலைத்து நிற்கும் ஞாபகச் சின்னம் ஏற்படுத்துவது அவசியம் என்றும் அவன் கருதினான். ஒரு விலங்கின் உயிரையும் மனித மனத்தோடு நினைக்கிற பரந்த அன்பு அவனுக்கு இருந்தது.

பத்திராபதி வீழ்ந்த இடத்தைக் கண்டுபிடிப்பதற்காகத் தேடிச் சென்றவர்களும் அவன் கருத்துக்கு ஏற்றபடி வெற்றியையே கொணர்ந்தனர். எலும்பு முதலியன அகப்பட்டுவிட்டது என்றும் பத்திராபதி புதையுண்ட இடமும் தெரிந்து விட்டது என்றும் சென்று வந்தவர்கள் கூறவே, உதயணன் தன் மனக்கருத்தை அவர்களுக்கு விவரித்து உரைக்கலானான். அப்போது பத்திராபதி இறந்து வீழ்ந்த பகுதியிலுள்ள காட்டு வேடர்களும் குறும்பர்களும்கூட அங்கே அழைத்துக் கொண்டு வரப்பெற்றிருந்தனர். தான் கூறுவதை அவர்களும் முக்கியமாக அறிந்துகொள்ள வேண்டுமென்பது உதயணனின் எண்ணம். “அன்று என் சபதப்படியே என்னையும் வாசவதத்தையும் காப்பாற்றி உஞ்சை நகரிலிருந்து தப்பி ஓடிவருவதற்கு உதவியாக இருந்தது பத்திராபதி என்ற இப் பெண்யானையே! இது எங்களுக்காகத் துன்பமுற்று இடை வழியில் தன் உயிரைத் தியாகம் செய்தது. இதற்குக் கிட்டும்படியான எந்த ஒரு நன்றியையும் நாம் இப்போது செய்ய முடியாதானாலும் நன்றி மறந்து விடுவதும் நல்லது அன்று. எனவே எந்த வகையிலாவது நம் நன்றிக் கடனை மறவாமல், பத்திராபதி இறந்துபோன இடத்தில் அதற்கு ஒரு நினைவுச் சின்னம் எழுப்ப வேண்டும் என்பது என் கருத்து.