பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

304

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

மாடத்தோடு கூடிய பெருங்கட்டடம் ஒன்றை அந்த இடத்தில் கட்டி, அதில் பத்திராபதியின் வடிவத்தை உருவாக்கிக் கோவில் கொள்ளுமாறு செய்ய வேண்டும். கோவிலில் பத்திராபதியின் சிலையுருவத்தைக் கடவுள் மங்கலம் செய்து, முறைப்படி நிலை நாட்டிய பின்னால் காலையும், மாலையும் அங்கே வழிபாடு நடத்தி வருவதற்கும் ஏற்பாடு செய்யவேண்டும்” என்று உதயணன் கூறியபோது அவனுடைய அந்த நன்றியுணர்வு மற்றவர் மனத்தை நெகிழச் செய்தது.

இதனுடன் பத்திராபதியின் உயிர் நற்கதி அடைவதற்கு வேறு ஒர் அறத்தையும் அங்கே செய்வது இன்றியமையாதது என்று உதயணன் கருதினான். “வழிச் செல்வோர் நீர் விடாய் தணித்துக் கொள்வதற்கு ஒரு தண்ணீர்ப் பந்தரும், பசித்துவந்த மக்கள் வயிறார உண்டு செல்வதற்காக ஒர் அட்டிற்சாலையும் அதனருகே அமைத்துவிட வேண்டும்” என்று கூறிக் கட்டிடம் அமைக்கும் கலைஞர்களையும் சிற்பிகளையும் அழைத்துவரச் செய்தான் உதயணன். கலைஞர்கள் வந்ததும் அவர்களிடமும் விவரத்தைகூறி முன்பு பத்திராபதி வீழ்ந்த இடமறிந்து வந்து கூறியவர்களோடு அவர்களைக் காட்டிற்கு அனுப்பினான். காட்டில் கலைஞர்களுக்கு எல்லாச் செளகரியங்களையும் ஏற்படுத்தித் தருமாறு அரண்மனை ஏவலாளர்கள் ஆணையிடப் பெற்றனர். பத்திராபதி வீழ்ந்த இடத்தை அடையாளங் கண்டு அதன் எலும்பு முதலிய அரும் பொருள்களைச் சேகரித்துக் கொடுத்தவர்களை இன்மொழிகளால் பாராட்டி, அவர்களுக்கு வேண்டிய பரிசில்களைக் கொடுத்து அனுப்பினான் உதயணன்.

காட்டு வேடர்களுக்கும் குறும்பர்களுக்கும் மிக்க மகிழ்ச்சி ஏற்பட்டது. பத்திராபதியின் கோவில் திருப்பணி பற்றிய செய்தி, அங்கேயே சென்று மீண்டும் எல்லோர்க்கும் தெரியுமாறு பறை சாற்றப் பெற்றது. இரண்டோர் திங்களில் கோவிலும் சிலையும் வேலை முற்றி நிறைவேறின. கடவுள் மங்கலம் நிகழ்த்துவதற்கு முன்னால் நடுக்காட்டிலிருந்த அந்த இடத்திற்குச் சென்று வருவதற்கு வசதியாகப் பெரிய