பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

364

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

மனத்தினளாய் அவள் அங்கிருந்தும் அகன்றாள். ‘வாசவதத்தை உண்மையாகவே இப்படி ஒரு கனவுதான் கண்டிருக்கிறாளே அன்றி, வேறு எதுவும் நிகழ்ந்ததை அவள் அறியமாட்டாள்! கனவினால் அவளுக்கு ஏற்பட்டிருக்கிற பயத்தையும் சந்தேகத்தையும்கூட நம்முடைய மறுமொழியால் நாம் தெளிவு செய்துவிட்டோம். இனி நமக்கும் மானனீகைக்கும் குறுக்கே நிற்க எவருமில்லை’ என்று நினைத்துக் கொண்டான் உதயணன்.

தன் எண்ணத்தையும் சூழ்ச்சியையும் வெளியாக்கும் படியான ஒரு திட்டத்தை வாசவதத்தை போட்டுக் கொண்டிருக்கிறாள் என்பது அவனுக்கு எப்படித் தெரியப் போகின்றது? அன்றும் ‘பகல் நேரம் எப்போது கழியப் போகின்றது? இரவு எப்போது வரும்?’ என்றெண்ணி மானனீகையைச் சந்திக்கும் இன்ப நினைவோடு இருந்தான் அவன். காலையில் உதயணன் சயன அறைக்கு வந்து, அவனிடம் தன் கனவைக் கூறுபவள் போலக் கூறி, அவன் நெஞ்சை ஆழம் பார்த்துவிட்டுப் போன வாசவதத்தை, தன் அந்தப் புரத்திற்குச் சென்றதும், முதல் காரியமாக மானனீகையை வரவழைத்து அவள் எங்கும் வெளியே செல்லாதபடி காவலில் வைத்துவிட்டாள். உதயணனின் சிறு விரல் மோதிரம் மானனீகையின் கையில் இருந்ததையும் அவள் கவனித்துக் கொண்டாள்.

பகற்பொழுது கழிந்து இரவுப்பொழுது வந்தது. வாசவதத்தை, மானனீகையைக் காத்துக் கொண்டிருந்த காவலர்களை மிகவும் கவனத்தோடு காக்குமாறு எச்சரித்துவிட்டுக் கூத்தப் பள்ளிக்குத் தானே புறப்பட்டுச் சென்று, மானனீகை உதயணனுக்காக முதல் நாளிரவில் எந்த இடத்தில் காத்திருந்தாளோ அதே இடத்தில் தானே இருளில் மறைந்து நின்று கொண்டாள். ‘மானனீகை வந்து காத்திருப்பாளே’ என்று இரவில் யாரும் அறியாதபடி புறப்பட்டுக் கூத்தப்பள்ளியைச் சேர்ந்த குச்சரக் குடிகைக்கு வந்தான் உதயணன். மானனீகைதான் இருளிடையே மறைந்து நிற்கின்றாள்