பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/399

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாசவதத்தையின் மயற்கை

397

அப்போது கருவுற்றிருந்தாள். கருவுக்குரிய அடையாளங்கள் அவள் உடலில் தெளிவாகப் புலப்பட்டன. உடலில் புதிதாக மின்னும் ஒளி ரேகை யிட்டிருந்தது. கருவுக்குரிய தாய்மை யுணர்வின் பொலிவு அவள் மதிமுகத்தில் இலங்கியது. உதயணன் இச் செய்தி அறிந்து பெருமகிழ்ச்சி கொண்டான். கருக்கொண்ட பெண்களுக்கு இயல்பாக ஏற்படும் மயற்கை அடிக்கடி அவளுக்கு ஏற்படத் தொடங்கியது. கருவும் நாளுக்கு நாள் அவள் ஆசையையும் தாய்மைப் பெருக்கையும் போலவே வளர்ந்து முதிர்ந்து வந்தது. இந் நிலையில் ஒரு நாள் இரவில் அரிய கனவு அநுபவம் ஒன்று அவளுக்கு ஏற்பட்டது!

‘விஞ்சையர் உலகிலிருந்து புறப்பட்டு வந்த திறமை மிக்க ஒரு வெள்ளை யானை தன் வயிற்றில் நுழைவதாகவும், பின்பு சிறிது காலம் சென்றபின் அது தன் வயிற்றிலிருந்து வெளித் தோன்றி வெள்ளியங் கிரிக்குப் புறப்பட்டுப்போய் அங்குள்ள கதிரவனை விழுங்குவதாகவும், தொடர்பும் பொருத்தமும் நம்பிக்கையும் ஏற்பட முடியாத அபூர்வக் கனவு ஒன்றை அவள் கண்டாள். மறுநாள் காலையில் துயிலெழுந்ததும் உதயணனிடத்தில் தன் கனவை உரைத்து அதன் உட்பொதிந்த கருத்தை விளக்குமாறு வேண்டிக் கொண்டாள் வாசவதத்தை. “உனக்குப் பிறக்கும் புதல்வன் வலிமையில் சிறந்தவனாக இருப்பான்! தன் வீரத்தாலும் ஆற்றலாலும் தேவருலகம் வரையும் சென்று அங்கும் தனது வெற்றியை நிலைநாட்டி ஆணை செலுத்தக் கூடியவனாக இருப்பான் அவன். இதைத் தான் நீ கண்ட கனவும் குறிப்பிடுகிறது! நான் கண்ட கனவிற்கு முனிவர் என்னிடம் உரைத்த பயனிலும் இதே கருத்தைத்தான் விளக்கினார்!” என்று உதயணன் அவளுக்குக் கனவின் பயனை விளக்கித் திருப்தியுறுமாறு செய்தான். பிறக்கப் போகும் தன் புதல்வனின் வீரப் பராக்கிரமத்தைக் கேட்டு மனம் புளகித்தாள் வாசவதத்தை! தாய்மைக்கே இயற்கையான மனக்களிப்பு அவளுக்கு ஏற்பட்டது.