பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

398

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

கருப்பமுற்றிருக்கும் காலத்தில் மயற்கையினால் பெண்களுக்கு உண்டாகும் இயற்கையான விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவது ஆடவர்களின் அவசியமான கடமை என்பதை நன்கு அறிந்துணர்ந்திருந்த உதயணன், தத்தைக்கு ஏதாவது விருப்பமுண்டாயின் அதை உடனே தெரிந்து கொண்டு நிறைவேற்ற விரும்பினான். தத்தையின் அருகில் அமர்ந்துகொண்டு அன்போடும் பரிவோடும் அவள் விருப்பத்தைக் குறிப்பாகத் தெரிந்துகொள்ள முயன்றான் உதயணன். கந்தவர்களைப்போல வானத்தில் விரும்புமிடங்களில் எல்லாம் பறந்து சென்று, பல ஆறுகளையும் மலைகளையும் நகரங்களையும் காண வேண்டும் என்ற ஆசை தனக்கு மிகுதியாய் இருப்பதாக வாசவதத்தை அவனிடம் தெரிவித்தாள். ‘அறியாமை கலந்த மயற்கை நிலையில் என்ன கேட்கிறோம், எதனைக் கேட்கிறோம், தான் அப்போது கேட்கின்ற அந்த ஆசை நிறைவேற்ற முடிந்தது தானா? அது நிறைவேறுமா என்றெல்லாம் சிறிதளவும் சிந்திக்காமல் கேட்டு விட்டாளே அவள்’ என்றெண்ணி அதை நிறைவேற்றும் வழியறியாமல் தயங்கினான் அவன்.

அது தன்னுடைய சாதனையின் வரம்பை விஞ்சிய வேண்டுகோளாயிருப்பது அவனுக்குப் புரிந்தது. அவளுடைய இந்த வேண்டுகோளை இப்படி எதிர்பாராத விதமாகக் கேட்டதும் திகைத்து விட்டான் உதயணன். இப்படிக் கேட்டதற்காக வாசவதத்தையின் மேலும் குற்றம் சொல்லி விடுவதற்கில்லை! தனது இந்த விருப்பம் பலிக்குமோ, பலிக்காதோ என்றஞ்சி இதனைத் தானாக வெளிப்படுத்தாமல் இருந்த அவளை, “எது உன் அசையாக இருப்பினும் சரி, அதை நிறைவேற்ற நான் தயங்கமாட்டேன். துணிந்து சொல்” என்று தைரியப்படுத்திக் கேட்டவனே உதயணன்தான். அவனுடைய தைரியத்தின் துரண்டுதலாலும் தனது மயற்கையாலும் அவள் அப்படிக் கேட்டாள். தத்தை வெளியிட்ட அந்த வேண்டுகோளைக் கேட்டதிலிருந்து மலைத்துப் போய்ச் சிந்தனையிலாழ்ந்துவிட்டான் உதயணன்.