பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதல்வன் பிறந்தான்

407

கோசாம்பி நகர் நோக்கித் திருப்பிச் செலுத்தலானான் உதயணன்.

கோசாம்பி நகரத்து அரண்மனையில் இயந்திரத்தை இயற்றிய தச்சன் முதலியோர் அது திரும்பி வருவதை எதிர் நோக்கிக் கோயில் முன்றிலில் ஆவலோடு காத்திருந்தனர். அவர்களுடைய ஆவல் வீண் போகவில்லை. இயந்திரம் கீழே இறங்குவதற்குத் திரும்பி வந்துகொண்டிருக்கிற காட்சியை, மேலே கண்டார்கள். தாங்கள் சுற்றிப் பார்க்கவேண்டிய அதிசயங்களை எல்லாம் இயந்திரத்தில் பார்த்து முடித்து விட்டுக் கோசாம்பி நகரத்தில் வந்து இறங்கியவுடன் உதயணனுக்கு ஏற்பட்ட முதல் உணர்ச்சி ‘அதை இயற்றிக் கொடுத்த தச்சுவினை இளைஞனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்’ என்பதே யாகும். இயந்திரத்திலிருந்து இறங்கியதும் ஆவலோடு பாய்ந்து சென்று அங்கு நின்று கொண்டிருந்த தச்சனைக் கட்டித் தழுவிக் கொண்டான் உதயணன்.

“இளங்கலைஞனே! எவராலும் நிறைவேற்றிவிட முடியாத ஆசையை என் மனைவி என்னிடம் வெளியிட்டாள். ‘அவள் விருப்பம் நிறைவேற வழியின்றி வீணாகவே போய் விடுமோ?’ என்று அஞ்சி, நான் நம்பிக்கை இழந்தநிலையில் மனம் சோர்ந்து இருந்தேன். அப்போது நீ வந்து என் முன் தோன்றி, இந்த அருமையான இயந்திர ஊர்தியை எனக்கு இயற்றிக் கொடுத்தாய்” என்று இவ்வாறு தச்சனை நோக்கிக் கூறிவிட்டுத் தன் உடலில் அணிந்து கொண்டிருந்த அணிகலன்களை எல்லாம் கழற்றி அவனுக்கு அளித்தான் உதயணன். ஆனால் தச்சன் அவற்றை ஏற்றுக் கொள்ளவில்லை. “அரசே! நான் யார் என்பதை இப்பொழுது உங்களிடம் கூறுகிறேன்” என்று தச்சனிடமிருந்து வந்த குரல் இனிமையான பெண் குரலாக இருக்கவே உதயணன் திகைப்போடு தச்சனை நிமிர்ந்து பார்த்தான். அங்கே தச்சன் இல்லை. ஒலியும் வனப்புமாகப் பொலிவோடு விளங்கும் தேவ கன்னிகை ஒருத்தி நின்று கொண்டிருந்தாள். உதயணன் ஒன்றும் புரியாமல் வியந்தான். அக்கன்னிகை தொடர்ந்து பேசவானாள்: