பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/414

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

412

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

ராயினும் அவர்களுடைய தீமையைக் கூறாத திண்மையும் யூகியினிடம் அமைந்துள்ளது” என்று அவையோர் கேட்கும் படியாக யூகியை வாயாரப் புகழ்ந்தான் பிரச்சோதனன்.

பின்னர் பிரச்சோதனன் தனது நாட்டிலுள்ள பேரறிஞர்களை எல்லாம் யூகிக்கு அறிமுகம் செய்து வைத்தான். தன் அமைச்சர்களுள் சிறந்தவராகிய பரதகனின் கன்னி திலகமாசேனை என்பவளையும் யூகியாலேயே தோல்வியுற்ற சாலங்காயனின் தங்கை யாப்பியையும் ‘தன் நாட்டிற்கு வந்து சென்றதற்கு அறிகுறியாக யூகியே திருமணம் செய்து கொள்ள வேண்டும்’ என்று பிரச்சோதனன் அவனை வேண்டிக் கொண்டான். யூகியும் அந்த வேண்டுகோளை மறுக்கவில்லை. பரதகன் மகள் திலகமாசேனையையும், சாலங்காயனின் தங்கை யாப்பியையும் தன் மனைவியராக ஏற்றுக் கொண்ட பின்பு, அங்கிருந்து புறப்பட்டுக் கோசாம்பி செல்லுவதற்கு விடை கொடுக்குமாறு பிரச்சோதனனை யூகி வேண்டிக்கொண்டான். கோசாம்பியில் தனக்குப் பிறந்திருக்கும் ஆண்மகனை உடனே சென்று காணவேண்டும் என்ற ஆவலே அப்போது யூகியின் அவசரத்திற்குக் காரணம். இது பிரச்சோதன மன்னனுக்குத் தெரிந்திருந்தது. அவனும் யூகி புறப்படுவதற்கு அன்போடு விடை கொடுத்துப் பரிசில்களாகச் சில சிறந்த பொருள்களையும் நல்கினான்.

“யூகி நீ எப்போதும் என் அருகிலேயே இருக்க வேண்டும்போல் எனக்குத் தோன்றுகிறது! உன்னைப் பிரிவதனால் ஏற்படும் வேதனையிலும்கூட எனக்கு இப்படி ஓருணர்வு உண்டாகிறது! ஆனாலும் நீ எங்களை மறந்துவிடாதே” என்று பரிவுடனே கூறியபின் அவனைக் கோசாம்பிக்கு அனுப்பினான் பிரச்சோதன வேந்தன். உஞ்சை நகரில் புதிதாக மணந்துகொண்ட மனைவி மார்களோடும், சிறப்பாகக் கிடைத்த பரிசில்களோடும் பிறந்த புதல்வனைக் காண வேண்டும் என்ற ஆசையோடும் கோசாம்பிக்கு விரைந்தான் யூகி. ஆர்வமும் பாசமும் சேர்ந்து உண்டாக்கிய விரைவே அவனுடைய பயணத்தின் விரைவாயிருந்தது.