பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



வேகத்தில் விளைந்த சோகம்

75

பொழிந்தன. இரலையும் பிணையுமாகிய மான்கள் முசுண்டைக் கொடியின் பசிய தழையை மேய்ந்தவண்ணம் திரிந்தன. காயாம்பூவும் கொன்றையும் கவினிப் பூத்து விளங்கும் பொழில்களில் இடை இடையே சிறுசிறு தோட்ட வீடுகள் விளங்கின. குற்றமற்ற வாழ்க்கை கோவலர் வாழ்க்கை. பசுக்களைக் காத்து ஓம்பிப் பயன்பெறும் வாழ்க்கை அல்லவா அது? அத்தகைய நல்வாழ்வு படைத்த முல்லை நிலத்தைக் கடந்து குறிஞ்சி நிலப் பகுதியை அடைந்தது பிடி.

மலைச்சாரவை நெருங்கிவிட்டதற்கு அறிகுறியாகச் ‘சோ’வென்று வீழும் அருவிகளின் இன்னிசை செவிகளுக்கு விருந்து செய்தது. அங்குமிங்குமாகத் தாவி ஓடும் கவரிமான்களின் காட்சியில் மிக்க அழகைக் கண்டார்கள். செண்பகமும் அசோகமும் செறிந்து வளர்ந்திருந்தன. குறிஞ்சியும் வேங்கையும் குளிரப் பூத்திருந்தன. எங்கும் பூமணம், காற்றில் கலந்து வீசிற்று. அகில் சந்தனம் முதலிய மரங்கள் நன்றாக முற்றி வெடித்திருந்ததனால், அவற்றின் மணம்வேறு தம்மை நுகரச் செய்தன. எங்கு நோக்கினும் தீஞ்சுனைகள். மலையில் சிற்சில இடங்களில் வேடர் இட்டிருந்த தீ அந்தக் கங்குல் யாமத்தில் தோன்றிய புதியதொரு கதிரவன் என விளங்கியது. இவ்வளவு வளம் பொருந்திய குறிஞ்சி நிலத்தை நூற்றிருபத்தைந்து காத எல்லையும் கடந்து மேற்சென்றது பத்திராபதி. எதிரே அகன்ற பெருங்கரைகள் இரண்டிற்கும் நடுவே கலகலவென்ற ஒலியுடன் நருமதையாறு ஒடிக்கொண்டிருந்தது. நடுவில் இடைவெளி யின்றி இருமருங்கும் நீர் நிரம்பிக் கொண்டிருந்த நருமதை நதி, பலவகை வளங்களும் பொருந்தியது. பல வளங்களையும் அந்தப் பிரதேசத்திற்கு அளிக்கக் கூடியதும்கூட. அதன் இரு கரைகளிலும் அடர்ந்த மரக் கூட்டங்கள் அணிவகுத்து நிற்பனபோல அமைந்திருந்தன. அந்தக் கரைகளில் எப்போதும் ஆரவாரத்துக்குப் பஞ்சமிருக்காது. நீர்த் துறைப் பரதவர் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் பறவைகளின் குரல்கள் போட்டி போடும் இடம் அது.