பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

படை வந்தது!

97

பெருந்துயருடன் அமர்ந்திருந்த தங்கள் அரசனையும் வயந்தகனையும் கண்ணுற்ற படைத் தலைவர்கள் வருந்தத் தக்க ஏதோ ஒன்று நிகழ்ந்திருக்க வேண்டுமென்று அனுமானித்துக் கொண்டனர். வயந்தகன் வாயிலாக நடந்தவற்றை அறிந்தபின் அவர்கள் “தாங்கள் கருதுவதுபோல உதயணன் முதலியோருக்குத் துயரம் எதுவும் நேர்ந்திரக்காது. இதோ புற்பரப்பின் இடையே தெரியும் அடிச்சுவடுகள் வேடர்களுடையன. இச் சுவடிகளைப் பின்பற்றிச் சென்றால் உதயணன் முதலியோரைச் சந்தித்தாலும் சந்திக்கலாம்” என்று உறுதிகூறி, இடவகனுக்குத் தைரிய மூட்டினர். படைத் தலைவர் கூற்றில் சற்றே நம்பிக்கை வரப்பெற்றவராய் வயந்தகனும் இடவகனும் எழுந்து அந்த அடிச்சுவடுகளின் வழியே பின்பற்றி நடந்தனர். ஏனையோரும் பின் தொடர்ந்தனர். சற்றுத் தொலைவு சென்றதும் படைத்தலைவன் மலைச் சரிவின் கீழே சிறுசிறு உருவிலே எறும்புக்கூட்டம் போலத் தோன்றிய வேடர் கூட்டம் புல்வெளியில் நடுவே தெரிந்தது. அந்தக் கூட்டத்தைப் படையுடன் நெருங்கிய அவர்கள், வேடர்களுக்கு இடையே உதயணன், தத்தை, காஞ்சனை இவர்களுடன் நிற்பதைக் கண்டு அளவிலா மகிழ்ச்சி அடைந்தனர். -

இடவகனுடைய படைகள் வேடரை வளைத்துக் கொண்டன. சுற்றிக் கருங்குவளை மலர் பூத்த பொய்கையுள் நடு மையத்தில் ஒரே ஒரு தாமரை பூத்தாற் போல நின்றான் உதயணன். சுற்றி வளைத்துத் துன்புறுத்திக் கொண்டிருந்த வேடர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பக்கத்தில் கருங்காலி மரத்தின் மேலிருந்த பறவையொன்று ஒருமுறை கத்தியது. அதைக் கேட்ட நிமித்திகன், “இனி நமக்குத் துன்பம் நேரும். நாம் இவ்விடத்தை விட்டு ஓடிவிடுதல் நல்லது” என்று வேடர்களை நோக்கிக் கூறினான். அவர்கள் யாவரும் அவனை வெறுப்புடன் எரித்துவிடுவது போலப் பார்த்தனர். நாற்புறமும் சிதறி ஓடுவதற்குத் தொடங்கிய வேடர்கள்.

வெ.மு. 7