பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
18

பெரிய இடத்து சகவாசம் இருப்பதுதான் பிற்கால வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும் என்பது அவரது வாழ்க்கையின் கொள்கை. அதுவே அசைக்க முடியாத நம்பிக்கையும் கூட. அதுவே! அவருக்கு உதவியும் வந்தது.

பெரிய மனிதர்களே இந்தக் காலை வேளையில், கடற்கரையில் பிடித்து விடலாம் என்று காற்று வாக்கில் கேள்விப்பட்டு ஓடோடி வந்தவர், பலமுறை முயற்சித்தும், தோற்றுப்போய் களைத்தவர் இன்று இளைப்பு மேலிட ஓடி வந்தார்.

'சார் சார்' என்ற இளைப்புக் குரல், குணசேகரை நடப்புலகத்திற்குக் கொண்டு வந்தது.கண்களை மட்டும் சற்று ஓரமாகத் திருப்பினார் குணசேகர். 'பல்லொல்லாம் தெரிய பல பாவங்கள் முகத்தில் விளையாட' 'எண்சான் உடம்பானது ஏழு சாண்களாகக் குறைய, உடல் குழைய' ஒரு கும்பிடு போட்டு நிமிர்ந்தார் சுப்ரமணியம்

பக்கத்தில் வரலாமா சார்! பகீரதன் தவம் செய்யற மாதிரி தன்னிலே நின்னுக்கிட்டுருக்கீங்களே! முனிவர்கள் செய்யற தவத்துல ராட்சசர்கள் வந்து கெடுத்துடுவாங்களாமே! அந்தமாதிரி நான் வந்துட்டேன் என்று அசட்டுச் சிரிப்புக்கிடையே. தத்துவ உவமைகளைக் கொட்ட ஆரம்பித்தார் சுப்ரமணியம்.

வசதியுள்ளவர்களிடமும், பெரியார்களிடமும் இப்படி இதிகாசக் கதைகள், இராமாயண உவமைகள் சொன்னால், கொஞ்சம் மனதில் இடம் பிடிக்கலாம் என்று யாரோ சொன்ன உத்தியை இங்கே கையாண்டார் சுப்ரமணியம்.

ஒரு சிறு சிரிப்பை உதிர்த்து விட்டுப் பேசாமல் நின்றார் குணசேகர். சுட்ரமணியத்திற்குப் 'பகீர்' என்றது. எப்படி பேச்சைத் தொடங்குவது ? தலையை சொறிந்து கொண்டார்.