பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞர் வெள்ளியங்காட்டான்



உரிமை


உழைப்ப வர்க்கு மட்டு முலகம்
உரிமை யுள்ள தென்றுதான்
எழுப்பு கின்ற வோசை எங்கும்
இடிமு ழங்கு தின்றுதான் !

காலம் முழுதும் வேலை செய்தும்
கையில் காசில் லாதவர்
மேலும் மேலும் காய்ந்து பானை
மீதில் பொங்கும் பாலென (உழைப்ப)


நாற்றை நட்டும் சோற்றுக் கின்றி
நலிந்த மக்கள் தமருடன்
காற்று மோத ஆற்றிடாமல்
கடலெழுந்து குமுறல்போல் (உழைப்பு)

நெய்த சேலைக் குரிய கூலி
நியதி யின்றிக் குறையவே
செய்த வேலை தீர்த்து மாலை
சினந்தெ ழுந்த சிறுத்தை யாய் (உழைப்பு)

நாடு முழுதும் வீடு கட்டி
நகர்க ளாக்கித் தந்தவர்
கூடி வாழக் குடிலு மின்றிக்
கும்பி வேக நொந்துபோய் (உழைப்ப)

மற்று முண்மை கடமை யன்பு
மறந்து விட்ட மனிதனைப்
பெற்ற தந்தை யெனினும் தூற்றிப்
பேச வேண்டு மினி யென (உழைப்ப)

பகலு மிரவும் சுகத்தில் மூழ்கப்
பணத்தைக் கூட்டிக் குவித்தவர்
அகமும் முகமுங் குவிய நெஞ்சில்
அச்சம் மூண்டு கவியவே (உழைப்ப)

99