பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞர் வெள்ளியங்காட்டான்



பதவி

உலகத்தைத் தன்குடும்ப மெனவே யெண்ணும்
உயர்ந்தகுண முள்ளவர்களுண்டோ ? என்றே
நலமதனை வெண்தட்டி லேந்தி னாளாய்
நாடெங்கும் தேடுகிறாள் நம்மை யீன்றாள் !
நிலையுண்டென் றுண்மையிலே நினைப்போர் வந்து
நெஞ்சுவந்து நேர்நின்று வாங்கிக் கொள்வீர்!

பகைவனென ஒருவரையும் பாவிக் காத
பண்பட்ட மனமுடையோ ருண்டோ? என்றே
சுகமதனைப் பொன்தட்டி லேந்தி னாளாய்ச்
சுற்றிக்கொண்டிருக்கின்றாள் நம்மை யீன்றாள் !
தகுதிதமக் குண்டென்று தாம்சொல் வோர்கள்
தயங்காது தனிநின்று வாங்கிக் கொள்வீர் ! '

அன்பென்னும் அருங்குணத்தை யகத்தில் கொண்டோர்
அகிலத்தில் யாரேனும் உண்டோ? வென்றே
இன்பத்தைச் செம்பவளத் தட்டி லேந்தி
எங்கெங்கோ தேடுகிறாள் நம்மை யீன்றாள் !
துன்பத்தைத் துக்கமெனக் கருது வோர்கள்
தோள்நிமிர முன்வந்து வாங்கிக் கொள்வீர் !

பெரியதெனச் சிறிய தெனச் சாதி பேதம்
பேசாதா ரெவரேனு முண்டோ? வென்றே
அரசுதனை மாணிக்கத் தட்டி லேந்தி
ஆவலுடன் கூவுகிறான் நம்மை யின்றாள் !
சரிசமமாய் அனைவரையும் நடத்துவோர்கள்
சாந்தமுடன் நேர்நின்று வாங்கிக் கொள்வீர் !

மதமென்ற வெறியேறி மலைக்கா திங்கே
மனிதரைத்தம் மக்களென மதிப்போர்க் கென்றே
சுதந்தரத்தை நல்வைரத் தட்டி லேந்திச்
சுருசுருப்பாய் வருகின்றாள் நம்மை யீன்றாள் !
பதவிப்பித் தற்றவர்க ளிருந்தால் வந்து
பண்புடனே கையேந்தி வாங்கிக் கொள்வீர் !

101