பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞர் வெள்ளியங்காட்டான்


வீறு கோளுரை

உள்ள மெனுந்திரு மலரில் ஓம்பிடும்
உண்மை நறுமணத்தால்-உலகில்
கள்ள மெனக்கவர் கபடக் கலைகளைக்
கடிந்த கற்றிடுவோம் !

தாழ்வு தனியொரு மனிதற்கேனும்
தராத தன்மையிலே-தவிரா
வாழ்வுக் குறுதுணை யான வசதிகள்
வாழ்த்தி வழங்கிடுவோம் !

ஞால மீதுநம் மரசெனும்பயிர்
நன்கு யர்ந்திடவே-நாளும்
வேலி யாக விளங்கி வெற்றியின்
விளைவு காத்திடுவோம் !

தழல்க ரங்கள் விரித்து யமனெமைத்
தாக்க நேர்ந்திடினும்-தாங்கி
நிழல்த ரும்பொழி லெனநினைத்தெதிர்
நின்று நீக்கிடுவோம் !

கோரித் தோல்வியில் பங்கு கொள்வது
கோழைக் குரியதெனின்-கோரி
வீரன் மணிக்கரம் வேண்டிப் பெறுவது
வெற்றி விருதென்போம் !

மண்ணில் தோன்றிய மாந்தர் மாசொடு
மாண்டு மறைவதினும்-மறையாப்
புண்ணி யச்செயல் புரிய வுயிர்தரல்
புகழுக் கெனப்புரியவோம் !

யாரும் மரண மடைந்து தீர்வதில்
அவனி யியல் பெனினும்-அமரில்
வீர மரணமன் றோநல் வீரர்கள்
வேண்டி யேற்பதுவே !

107