பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞர் வெள்ளியங்காட்டான்



நொய்யலாறு

ஆறென்றாலும் ஆறு தான்
அருமையான ஆறுதான்
வேறென்றாலும் காவிரி
விரும்பிக் கொள்ளும் ஆறு தான் !

ஆனி யாடித் திங்களில்
அருவியான அவையெல்லாம்
கானில் கூடிப் பேசியே
கலந்திறங்கும் ஆறு தான் !

சிறிய சிறிய அணைகளால்
சீர்மிகும் வாய்க் கால்களால்
வறிய குளங்களுக்கெல்லாம்
வாழ்வளிக்கும் ஆறு தான் !

செயலே லாம்செழிக்கவும்
செல்வம் தான்கொழிக்கவும்
வயலெ லாம்வ ழுத்தவும்
வழங்க வந்த ஆறு தான் !

மருக்கொழுந்து மணத்துடன்
மாந்த ளிர்நி றத்துடன்
பெருக்கெடுத்திவ் வுலகினைப்
பேணச் செல்லும் ஆறு தான் !

கோவை நகரப் பெருமையைக்
கூர்ந்தறிந்து கொண்டுபோய்க்
காவிரித்தாய் கேட்கவே
கவிதை பாடும் ஆறு தான் !

பொய்யில் லாத புலமைபோல்
புனித மான ஆறுதான்
நொய்ய லாறென்றனைவரும்
நுவலவோடும் ஆறு தான் !

121