பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞன் வெள்ளியங்காட்டான்



அந்தி வானம்

சங்கரனும்நானும், அன்று
சமயத்தருக்கம் செய்துகொண்
டெங்கள் வீட்டுத் திண்ணைமேல்
இருந்தோமந்தி வேளையில் !

காடுகரையில் மேய்ந்து வந்த
காளை கறவைக் கன்றுகள்
வீடுகளை நாடி மெத்த
விரைந்துகொண்டிருந்தன !

வாசல்கூட்டி நீர் தெளித்து
வண்ணக்கோல மிட்டபின்
தோசைவார்த்துத் தருவ னென்று
சொல்லலானாள் அன்னையும் !

எண்ணெழுத்து பார்த்தலுத்த
எங்கள்கண்ணுக் கினிமையாய்த்
திண்ணை மீதி ருந்த போது
தெரிந்ததந்தி வானமும் !

நீலவானைத் தொடுவதொப்ப
நீண்டமலையும் நின்றது;
காலம் கழியநடந்ததனால்
களைத்திருந்தான் கதிரவன் ;

சேர்ந்தவாறிருந்து நாங்கள்
சிந்தை இனிக்க வூன்றியே
ஒர்ந்தவற்றைப் பார்க்கலானோம்
ஓகோ! பாவ மென்னவே

கதிரவனும் சிகரம் முட்டிக்
கால்முறிந்து வீழ்ந்தனன்;
உதிரமந்தி வான் சிவக்க
ஒழுகியுரைய லாச்சுதே !

125