பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளியங்காட்டான் கவிதைகள்

நீர்த்துளி


சிதறிய வொருசிறு நீர்த்துளி நானென்
செயல்களைச் செப்பிடுவேன் ;- அருங்
கதிரவனாணையிலாவியாய் மாறியே
கண்ணெதிர் தப்பிடுவேன் !

முகிலென வானிடை மொய்த்து மகிழ்ச்சியாய்
மோகனம் புரிந்திடுவேன் - ஒரு
அகிலத்தை யாண்டிடு மரசெனப் புகழ்ச்சியாய்
அணிந்து திரிந்திடு வேன் !

காற்றெனும் குதிரையின் மீதி லமர்ந்து
களிப்புடனுலவிடுவேன் - என
தாற்ற லறிந்தெழில் சோலை யழைத்திடின்
அன்புடன் குலவிடுவேன் !

மஞ்சன னெனமலை மாது மயங்கியே
மகிழ்ந்தெனை மருவிடுவாள் - களி
விஞ்சிடக் கொஞ்சியோர் மின்னலை வீசி
வெடித்திடின் வெருவிடுவாள் !

பயிர்களெ லாமெனைப் பார்த்திட ஏங்கியே
பரிவுட னழைத்திடவே - பெருந்
துயர்களெலாம் தொலைத்தின்புறத் துளிகளைத்
தூவுவேன் தழைத்திடவே !

சீருடன் பெருகிய நீரெலாம் ஓரிடம்
சேர்ந்திட ஏகிடுவேன் - குளம்
ஏரிகள் நிறைப்பதற்காகவே பாரிடை
எழில்நதி யாகிடுவேன் !

ஞாலத்திற் கண்டநற் காட்சிக ளனைத்தையும்
நண்பருக் கெடுத்துரைப்பேன் - வருங்
காலத்திற் கடலிடைநீரெனக் கலந்ததில்
கண்படுத் திருப்பேனே !

125