பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



கவிஞர் வெள்ளியங்காட்டான்


கோரைப்புல்


ஏரை யியக்கத் தொடங்கினான் - உழவன்
எழுந்த வுடன் முதல் வேலையாய் !
கோரை யறுகு குமைந்தன - அந்தோ
கொடுமை யிது வெனக் கூறியே !

கடவுள் படைத்த வுயிர்கள்நாம் - இதை
கருத மறந்தஇம் மானிடன்
குடித்தனம் செய்ய முனைகிறான் - நமது
குலத்தை யுழுது தொலைக்கிறன்.

நன்றி மறந்தஇம் மாடுகள் - நாளும்
நம்மையே தின்றுயிர் வாழ்பவை
கொன்றினி நம்மைக் குவிக்கவே- இன்று
கூடிற் றிவனுட னென்னவே

கோரைக்குக் கோபம் பிறந்தது - பூண்டும்
கூடவே தோள் கொட்டி ஆர்த்தது ;
பாருக்குள் வாழும் உரிமையை - எவன்
பறிப்பவன் பார்க்கலாமென்றது.

'தரிசு நிலத்தை யுழுவது - தார்மிக
தருமத்திற் கேபுறம் பானது
அரசியல் சட்டம் இடங்கொடா' - தென்றே
அறுகுவக் கீல்வாதம் செய்தது !

கோரையறுகுபுல் பூண்டுகள் - போடும்
கூக்குரல் காதிற்கொள்ளாமலே
ஏரை யுழவ னியக்கினான் - நல்ல
ஈரம் கிடைத்ததே யின் றென !

பொதுநலத் தின்பகை யானபுல் - பூண்டின்
போக்கினைக் கண்டும் பொறுமையாய்
விதைத்தினை கூடையில் குந்தியே - வித்தும்
வேளை வரவெதிர் பார்த்ததே !

129