பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞர் வெள்ளியங்காட்டான்


விட்டில் பூச்சி


பொய்வ ழக்குக ளாடித் தன துகைப்
பொருளிழந்தபின் வாழ்க்கையில்,
செய்வதென்னினித் தெய்வ மே' யெனும்
சீரழிந்தவன் சிந்தைபோல்

வைய கந்தனை மூட லாச்சுது
வந்த சூழ்ந்தமைக் காரிருள் !
நெய்விளக்கினை யேற்றி வைத்ததை
நீக்க நேர்ந்தது வீட்டிலே !

சின்னஞ் சிறயிதோர் விட்டில் பூச்சிதன்
சிறகி ரண்டும் விரித்ததாய்ப்
பொன்னெனத்தழைந் தெரிவி ளக்கினைப்
பொருந்தி வலமிட வந்ததும்

பின்னு முன்னுமெண் ணாதுபாய்ந்ததில்
பித்தெ னும்படி வீழ்ந்தது;
இன்ன லென்னதான் நேர்ந்த தோ? அதன்
இதய மதனைநானோர்கிலேன்.

கண்ணி ரண்டுமில்லாம லேயது
கால னுக்கிரை யானதோ?
மண்ணின் மீதிது காறும் வாழ்ந்துதன்
மனது நொந்துதான் போனதோ?

நுண்ணி தான அவ் வீட்டில் விளக்கில்
நுழைந்தி றந்ததன் காரணம்
எண்ணி யெண்ணிநான் பார்த்த போதிலும்
இன்ன தென்றதை யோர்கிலேன் !

பறந்து வந்துதன் சிறகி ரண்டும்
பலங்கு றைந்ததில் நேர்ந்ததோ?
மறந்த வாக்கினில் வந்து வீழ்ந்து
மடிந்து போகவே நேர்ந்ததோ?

'பிறந்த நாளி லிருந்து மரணம்நம்
பிடரி மேலமர்ந்துள்ளது ;
அறிந்து கொள்ளினி' யென்று தானெனக்
கன்றி றந்துகாண் பித்ததோ?

150