பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞர் வெள்ளியங்காட்டான்

கேள்வி

என்ன எண்ண வேண்டும் ? இனி நான்
என்ன பேச வேண்டும் ?
என்ன கேட்க வேண்டும் ? - இனி நான்
என்ன செய்ய வேண்டும்

நினைவு கூறு கின்றேன் - பிறர்முன்
நின்று வினவு கின்றேன் !
மனித னாய்ப்பி றந்தோன் - மலர்போல்

மணங்க மழ்வதற்கும் ?
(என்ன)


அண்டி னோரை யண்டி - யணைத்தே
ஆத ரிக்க வும், கற்
கண்டு போன்ற சொற்கள் - கூறிக்

களிப்பு மூட்டு தற்கும் !
(என்ன)


பசுமையான பயிர்கள் - வெயிலால்
பரித விக்கும் போது,
விசும்பி னின்று வீழும் - மழையாய்

விளங்கி வாழ்வ தற்கும் !
(என்ன)


பொன்ன விர்ந்த மேனி - புதுமை
பூத்தொ ளிர்க ருங்கண்
சின்னஞ் சிறுகுழந்தை - யெனவே

சிரித்து வாழ்வ தற்கும் !
(என்ன)


இனிமை யான தென்றல் - அதிலும்
இனிமை யான நிலவு,
இனிமை யான இசையாய் - உலகை

இனிமை செய்வதற்கும் !
(என்ன)


'கன்றை யீன்ற மாடு - குஞ்சைக்
காத்தி டுங்க போதம்'
என்று கூறு மாறாய் - மக்கட்

கேவல் செய்வ தற்கும் !
(என்ன)