பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளியங்காட்பான் கவிதைகள்

ஆர்வம்

உயிரை யோம்புதற் குணவளித்திடும்
உழவ னானால்நான்,
பயிர்கள் பயனுறப் பண்ணிப் பசியினைப்
பறக்க டித்திடுவேன் !

ஆயிரம்பொற் காசை டைந்திடற்
கருக னானால் நான்.
வாயில் லாதவர் வறுமை தீர்ந்திடும்
வழிவ குத்திடுவேன் !

அறத்தைக் காத்திடு மரிய படைக்கொரு
அதிப னானால் நான்,
மறத்தைக் காட்டுதலின்றி மனத்தினை
மாற்றி வென்றிடுவேன் !

அறிவுத் திறமையி லரசு காத்திடும்
அமைச்ச னானால்நான்
உறுவ தனைத்தையு மோர்ந்து ரைத்திடை
யூறு தீர்த்திடுவேன் !

வெற்றி வேலினை யேந்தி விளங்கிடும்
வேந்த னானால் நான்,
பெற்ற பிள்ளையென் றுற்ற வுலகினைப்
பேணிக் காத்திடுவேன் !

சீவ ராசிகள் செனிக்க வைத்திடும்
செயல னானால் நான்,
சாவில் லாது படைத்துச் சாந்தியைச்
சகத்தில் நிறுவிடுவேன் !

புவியில் போற்றிடும் நூல்கள் பயின்றொரு
புலவனானால் நான்,
கவிதை காவிய மியற்றிக் களித்திடக்
கவலை தீர்ப்பேனே !

164