பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞர் வெள்ளியங்காட்டான்


தன்மதிப்பு



நம்மை நாம்மதிப் போம் பிறர்க்குநாம்
நன்மை நாடுவோராய் !
தம்மைத் தாம்மதிக் குந்த ரத்திலித்
தரணி யும்ம திக்கும் !

கரும்பி தென்னவே பகரு மாறுதான்
கருதி முயலுமானால்
விரும்பும் நல்லதோர் வெல்ல மென்னவே
வேம்பு மாறித் தீரும் !

அரசனாண்டியா ராயி னும்மலர்
அணுவும் பேதமின்றி
சரிசமானமாயின்பம் தந்துதன்
தன்ம திப்பு காக்கும் !

புத்தி மிக்கவர் புவியில் உள்ளபைம்
பொன்னைக் காட்டி லும்தான்
நித்தம் தன்மதிப் பென்னு மிதனையே
நெஞ்சில் பேணி வைப்பார் !

தோது செய்துநம் பகைவர் நாடொறும்
துன்புறுத்தி னாலும்
நீதி யென்றநன் னிலையில் வெல்லவே
நேரும் தன்மதிப்பும் !

நன்மை நாடவும் செய்யும் நம்மை, நம்
நாவி னா லுரைத்த
சொன்ம றாமலும் செய்து சுந்தரச்
சுயம்பு வாக்கி வைக்கும் !

கவிஞ ரென்பவர் கண்டு காட்டியே
கைச லித்து விட்டார் ;
'அவர வர்மதிப் பவர வர்கரத்
தடங்கி யுள்ள தென்றே !

171