பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞர் வெள்ளியங்காட்டான்

ஆயிரத்து ஐம்பது பழமொழிகளைத் தொகுத்திருக்கிறார்.

'ஆன்மீகம்' என்ற கட்டுரைத் தொகுப்பில் இருபத்து இரண்டு கட்டுரைகள், உரைநடைக் களத்தில் அணிவகுப்பு நடத்துகின்றன. அவை உபநிடதத்தை முழுவதுமாக உள்வாங்கிக் கொண்டு எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பாகும். ஆன்மீகத்தை அறிவியல் பூர்வமாக மீள்பார்வை செய்து, மந்திர உச்சரிப்பாளர்களையும், சோதிடர்களையும் விசாரணைக்கு உட்படுத்துகிறார். இப்படிப் பல பதிவுகள் வெளிச்சத்துக்கு வராமல் இருந்தாலும் அவை கவிஞரின் பன்முக ஆளுமைக்குச் சான்றாக அமைகின்றன.

பொதுவாகப் பொட்டல் காட்டில் வசித்தாலும் கவிஞனுக்கு அதன் புழுதிக் காற்றுகூட சுகமாகத்தான் இருக்கும். கவிஞர் பிறந்த ஊரான வெள்ளியங்காடு நீலகிரி மலையின் அடிவாரத்துத் தொட்டில். வாழையும் தென்னையும் தெம்மாங்கு பாட, திராட்சையும், கரும்பும் தேனாய் இனிக்கும் பசுமையான கிராமம். இராமசாமி என்ற தனது இயற்பெயரை எங்கும் சுட்டாமல் வெள்ளியங்காட்டான் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு மண்ணின் மைந்தனாக இறுதிவரை வாழ்ந்திருக்கிறார்.

இக்கவிஞர், கலைஞன், உழவன் என்ற வரிசையில் கவிதை நூல்கள் கொண்டு வரவேண்டும் என ஆசைப்பட்டிருக்கிறார். அவை வாழ்நாளில் நிறைவேறாமல் போனது. இப்படியான நிறையக் கனவுகளோடு வாழ்ந்திருக்கிறார். கவிஞரின் வாழ்வு என்பது இடப்பெயர்வு வாழ்க்கையாகவே இருந்திருக்கிறது.

கவிஞரின் எல்லாப் படைப்புகளையும் மறுபதிப்புச் செய்வது, வெளிவராத படைப்புகளையும் தமிழ் மக்களுக்கு அளிப்பது என்பது கவிஞரது மகளின் விருப்பம். அவரின் பேரன் திரு.மகேந்திரனின் ஆசையும் கூட ..... அதற்காக ஒரு முயற்சியை கோவை மேற்கு மாவட்ட தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் எடுத்தது. இப்போது தாயகம், இனிய கவிவண்டு, தலைவன் போன்ற தொகுப்புகளிலிருந்து சிறந்த கவிதைகளைத் தொகுத்து ஒரு கவிஞனின் காலடிச் சுவடுகளாக வெளிவருகிறது. இந்நூல் மிகச் சிறப்பாகக் கவிஞர் புவியரசின் எண்ண அலைகளிலிருந்து வண்ண

195