உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

          மாதர்கள் மாந்தி மகிழுமெழில் மார்புக்குள்
          தீதரும் பாத திருக்கமலப் - போதரும்பிப்
          பூத்துப் பொலிதலெனப் பொன்னிதயம் பூத்த புகழ்
          முத்துப் பொழியும் முகம்.

இவ்வெண்பா உவமையணிக்குக் காட்டாகின்றது. இதைப்போன்று பல்வேறு அணிகளும் பாங்குடன் பொதிந்து பொலிவு பெற்று விளங்குகின்றன.

நூலாசிரியர் உலகியல் தன்மைகளை மிகவும் நுணுக்கமாக நோக்கி விளக்கியுள்ள திறமும் போற்றத் தக்கதாகவுள்ளது.

          சோறுகா னாதான் சுதந்திரமும் சோறிருந்தும்
          பேறுகா னாதான் பெருமிதமும் - பேறிருந்தும்
          வீறுகாணாதான் விகசிதமும் வீறிருந்தும்
          ஆறுகா னாதான் அவம்.

          குடல்பசியை யாற்றிக் கொளக்கூடும் கூடின்
          உடல்பசியை யாற்றிக் கொளக்கூடும் - கடல்பசிபோல்
          போதுமெனக் கூறாப் பொருள்பசியை யாற்றுவது
          நீதமெனக் கூறும் நிலை.

மேற்கண்ட வெண்பாக்கள் உலகியல் சிந்தனை வயப்பட்ட செய்திகளை விளக்கும் தன்மையுடைய இவரது பாக்களுக்கோர் காட்டுக்களம்.

கவிஞரின் தமிழ்ப் பற்றினை இந்நூலில் காணலாகும் பல பாடல்கள் பறைசாற்றுகின்றன.

          அமிழ்ததனை யாராதா ரென்ன, அருமைத்
          தமிழ்த்திறனை யோராது தாழ்ந்தார்.

28