பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சான்றோர் என நான் நினைத்த சில பேராசிரியப் பெருங்குடி மக்களைச் சந்தித்து, உரையாடிய போதுதான்,நான் கற்ற,பெற்ற, அவமானமும், கசப்பும் உவர்ப்போடு கூடிய கண்ணிரும் என் தந்தையைப் பற்றி எழுதத் துண்டின.

முகத்தின் அழகைக் கண்ணாடியில் கண்டு ரசிக்கத் தெரிந்த நமக்கு, நம் இதயத்தின் அழகையும், குற்றமற்ற அதன் தன்மையையும் கண்டு கொள்ளவும், கண்டு களிக்கவும் கூடத் தனி ஒரு கண்ணாடி வேண்டும்.

வாழ்வின் உண்மைகள் கற்பனைகளல்ல. அவை கசப்பு மாத்திரைகள். நாங்கள் அவற்றை மென்று விழுங்கிவிட்டபோதிலும், அதன்தன்மை என்னவோ இன்னும் ஒட்டிக்கொண்டுதான் உள்ளது. அதன் வெளிப்பாடே இவ்வெழுத்துக்கள். இது நயமற்று, நளினமற்றதாயினும், இதில் உள்ள குற்றங் குறைகளைச் சுட்டிக் காட்டுங்கள். ஏனெனில் உண்மையை அலங்கரிக்க முடியாது. அதன் அழகும் எழிலும், பரிபூர்ணமான நிர்வாணத்தில் மட்டுமே பரிணமிக்க முடியும்.

விவேகானந்தர் சொன்னதுபோல, "பழைய சமுதாயம் ஆனாலும், புதிய சமுதாயமானாலும், உண்மை எதற்கும் தலை வணங்காது. சமுதாயம்தான் உண்மைக்குத் தலை வணங்க வேண்டும் 1 அல்லது அழிந்து போக வேண்டும்!"

" தாழ்வின் எல்லை நமக்கு மிக அருகில். ஆனால் உயர்வின் எல்லையோ மிக மிகத் தொலைவில் இந்த எல்லையைச் சென்று சேர, இடைவிடாத முயற்சியும், எச்சரிக்கையும் தேவைப்படுகிறது. புகழ் என்பது உண்பதிலும், உடுப்பதிலும் இல்லை. அயராத உழைப்பில், பாலில் வெண்ணெய் போல் அது கலந்திருக்கிறது . என்ற என் தந்தை, சென்ற நூற்றாண்டில் இதே காலகட்டத்தில், மணற் பரப்பே கரும் பலகையாக, விரலே பலப்பமாக எழுதிப் படித்த ஆண்டுகள் மூன்றாக இருக்க........ எப்படி முடிந்தது.இப்படி ஒரு சிகரத்தை எட்டிப் பிடிக்க?

37